நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

5 மாநிலங்களில் கைவரிசை காட்டிய 'லோன் ஷார்க்' கும்பல்: ஜொகூர் போலிசாரால் அதிரடியாக கைது

ஜொகூர் பாரு:

சட்டவிரோதக் கடன் கும்பலின் (Ah Long) ஏவலர்களாகச் செயல்பட்டு, பொதுமக்களின் வீடுகள் மீது வண்ணப்பூச்சு, பெட்ரோல் குண்டுகளை வீசி மிரட்டல் விடுத்த இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேரை ஜொகூர் மாநிலப் போலிசார் கைது செய்துள்ளனர். 

கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி, ஜொகூர் பாருவில் உள்ள ஓய்வுபெற்ற முதியவர் ஒருவரின் வீட்டின் மீது சிவப்பு வண்ணப்பூச்சு வீசப்பட்ட புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் இவர்கள் பிடிபட்டனர். அண்டை நாட்டில் கடன் வாங்கிய வாடகைதாரர் ஒருவரின் செயலால், இந்த முதியவரின் வீடு இலக்காக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவரை சிலாங்கூர், பாங்கி பகுதியில் போலிசார் மறித்தபோது, அவர் போலிஸ் வாகனத்தின் மீது மோதிவிட்டுத் தப்பிக்க முயன்றார். 

இருப்பினும், விடாமல் துரத்திய போலிசார் அவரைத் தலைநகர் செராஸ் பகுதியில் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து கோலாலம்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் மற்ற ஐந்து பேரும் சிக்கினர். அவர்களிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, இரண்டு தோட்டாக்கள், கடனைத் திரும்பக் கேட்கும் வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், இந்தச் சந்தேக நபர்கள் ஒருமுறை வண்ணப்பூச்சு வீசுவதற்கு RM600 ரிங்கிட்டும், பெட்ரோல் குண்டு வீசித் தாக்குவதற்கு RM1,000 ரிங்கிட்டும் கூலியாகப் பெற்றுள்ளனர் என்பது அம்பலமானது. 

இவர்கள் ஜொகூர், சிலாங்கூர், மலாக்கா, பேராக், பஹாங் ஆகிய மாநிலங்களில் குறைந்தது 25 மிரட்டல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட அனைவரும் போதைப்பொருள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பதும், தற்போது அவர்களின் சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இக்கும்பலின் பின்னணியில் உள்ள முக்கியத் தலைவர்களைக் கண்டறிய அண்டை நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset