நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலானில் அரசியல் நெருக்கடி: சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்ட அம்னோ கோரிக்கை

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்குத் தீர்வு காணும் வகையில், உடனடியாகச் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று மாநில அம்னோ வலியுறுத்தியுள்ளது. 

சட்டமன்றக் கூட்டம் ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டால், அது மாநில நிர்வாகத்தில் நிலையற்ற தன்மையை உருவாக்கிப் பல புதிய சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று மாநில அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ ஜலாலுதீன் அலியாஸ் எச்சரித்துள்ளார்.

முன்னதாக, அம்மாநில முதலமைச்சர் அமினுதீன் ஹருன் தலைமையிலான அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை அம்னோ, தேசிய முன்னணி கட்சியைச் சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டனர். 

மாமன்னர் குடும்பம் தொடர்பான சில முக்கிய விவகாரங்களைத் தீர்ப்பதில் அரசு தோல்வியடைந்ததே இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அதே வேளையில், எதிர்க்கட்சியான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் 5 உறுப்பினர்கள், மாநிலத்தின் அரசியல் நிலைத்தன்மைக்காக அம்னோவுடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை மாநில மாமன்னரால் தொடங்கி வைக்கப்பட்ட 15-வது சட்டமன்றக் கூட்டத் தொடர், திங்கட்கிழமை தொடர வேண்டிய நிலையில் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 

இந்தத் தாமதம் மாநிலத்தின் கொள்கை முடிவுகளையும் நிர்வாகச் செயல்பாடுகளையும் பாதிக்கும் என்பதால், சட்டமன்றச் சபாநாயகர் (Speaker)  உடனடியாகச் சிறப்பு அவையைக் கூட்டி பெரும்பான்மையை உறுதி செய்ய வேண்டும் என்று ஜலாலுடின் கேட்டுக்கொண்டார்.

தற்போதுள்ள சூழலில், மாநில அரசின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவும் மக்களுக்கான பணிகளைத் தடையின்றித் தொடரவும் சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

இதனால் நெகிரி செம்பிலான் மாநில அரசியலில் வரும் நாட்களில் முக்கிய மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset