நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உற்பத்தி, சேவைத் துணைத்துறைகளை வலுப்படுத்த உதவும் புதிய முன்முயற்சிகள்: அமிருதீன்

ஷா ஆலம்: 

உலகளாவிய விநியோக நெருக்கடியின் தாக்கத்தை எதிர்கொள்ளும் மாநிலத்தின் இரண்டு முக்கிய துணைத்துறைகளான உற்பத்தி, சேவைகளை வலுப்படுத்த உதவும் பல புதிய முன்முயற்சிகளை சிலாங்கூர் அரசாங்கம் தொடங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி கூறியுள்ளார்.

தொழில்துறையின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை உந்துவதற்கும் அந்த முன்முயற்சிகள் வடிவமைக்கப்படும் என்றார் அவர்.

வாழ்க்கைச் செலவு, பணவீக்கம், நலிவடைந்த குழுக்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, முன்னதாக அறிவிக்கப்பட்ட சிலாங்கூர் மீள்திறனை வலுப்படுத்தும் தொகுப்பின் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

"அடுத்ததாக, (அந்தத் தொகுப்பு தொடங்கப்பட்ட பின்னர்) பாதுகாக்கப்பட வேண்டிய சிலாங்கூரின் இரண்டு முக்கிய துணைத்துறைகளான சேவை, உற்பத்தியைத் தக்கவைக்க முயற்சிப்போம். இன்ஷா அல்லாஹ், அடுத்த மாதத்தில் அந்த முன்முயற்சிகள் அறிவிக்கப்படும்.

"இன்வெஸ்ட் சிலாங்கூர் பிஹெச்டி ஏற்கனவே விவாதங்களை நடத்தியுள்ளது. இந்தத் தொழில்களைத் தக்கவைக்க முடியும் வகையில், பல முன்முயற்சிகளைத் தொடங்குவோம்" என்று நேற்று நடைப்பெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் அவர் கூறினார்.

மேலும், தொழில்துறை செயல்பாடுகளின் தொடர்ச்சி, மக்கள் தொடர்ந்து வேலை வாய்ப்புகளையும், நிலையான வருமான ஆதாரத்தையும் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கு மிகவும் முக்கியமானது என்று அமிருதீன் குறிப்பிட்டார்.

"இந்தத் தொழில்கள் தொடர்ந்து இயங்கும்போது, மக்கள் இன்னும் வேலை வாய்ப்புகளையும், வருமானத்தையும் பெறுகிறார்கள். இதைத்தான் நான் எப்போதும் குறிப்பிடுகிறேன், மேலும் நாம் கண்ணியமான பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்" என்றார் அவர்.

தற்போதுள்ள முன்முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், தற்போதைய பொருளாதாரச் சவால்களைச் சமாளிப்பதில் மிகவும் பயனுள்ள நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கும், அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் பரிந்துரைகளையும் மாநில அரசாங்கம் வரவேற்பதாக அவர் கூறினார்.

இதற்கு முன்னர், சிலாங்கூர் மீள்திறனை வலுப்படுத்தும் தொகுப்பின் இரண்டாம் கட்டத்தின் கீழ், பொருளாதார பின்னடைவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, சேவை, கட்டுமானம் போன்ற முக்கிய துறைகளுடன், இன்வெஸ்ட் சிலாங்கூர் கலந்துரையாடல் அமர்வுகளை நடத்தும் என்று அமிருதீன் கூறியிருந்தார்.

உலகளாவிய நிச்சயமற்ற சவால்களை எதிர்கொள்ளும் பொருளாதார பின்னடைவை வலுப்படுத்துவதற்கான மாநில அரசாங்கத்தின் முன்முயற்சியாக, சிலாங்கூர் மீள்திறனை வலுப்படுத்தும் தொகுப்பை அவர் அறிவித்திருந்தார்.

அந்தத் தொகுப்பு, மக்களுக்கான இலக்கு உதவி, உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய உடனடி ஆதரவு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது. தொடர்ந்து, சிலாங்கூரில் உள்ள இலக்குக் குழுக்களுக்குச் செயல்திறன், நேரடித் தாக்கத்தை உறுதி செய்வதற்கான பல்வேறு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பையும் உள்ளடக்கியதாக இது விளங்குகின்றது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset