நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புக்கிட் ஜாலிலில் 2026 தொழிலாளர் தினக் கொண்டாட்டம்: 4,000 வேலை வாய்ப்புகளை வழங்குகிறது

புத்ராஜெயா:

புக்கிட் ஜாலிலில் நடைபெறவிருக்கும் தொழிலாளர் தினக் கொண்டாட்டம் கிட்டத்தட்ட 4,000 வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.

மனிதவள அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

2026ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் தினக் கொண்டாட்டம் வரும் மே 1 முதல் 3ஆம் தேதி வரை புக்கிட் ஜாலிலில் உள்ள யூனிஃபை அரங்கில் நடைபெறவுள்ளது.

இக்கொண்டாட்டம் நாட்டின் தொழிலாளர்களின் பங்களிப்புகளைப் பாராட்டுவதற்கும், வேலை வாய்ப்புகள், திறன் மேம்பாடு,  மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகள் மூலம் தொழில் சூழலை வலுப்படுத்துவதற்கும் ஒரு தளமாக அமைகிறது.

சிவில் தொழிலாளர்கள் கெசுமா பங்சா (CIVIL Workers Kesuma Bangsa) என்ற கருப்பொருளைக் கொண்ட இந்தக் கொண்டாட்டத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடங்கி வைக்கவுள்ளார்.

தொழிற் சங்கங்கள், சட்டரீதியான அமைப்புகள், பொது, தனியார் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 15,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்தக் கூட்டத்தின் முக்கிய அம்சமாக பிரதமரின் சிறப்புரையும், தேசிய வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் 2026 தொழிலாளர் தின விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெறும்.

மேலும் தொழிலாளர்கள், முதலாளிகள், தொழிற்சங்கங்கள், ஊடகங்கள், சிறந்த குழுக்களைச் சேர்ந்த பிரமுகர்கள் உட்பட மொத்தம் 14 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும்.

விருது பெறும் ஒவ்வொருவருக்கும் 10,000 ரிங்கிட்  ரொக்கப் பணத்துடன் ஒரு பாராட்டு கேடயமும் வழங்கப்படும். இதன் மூலம் மொத்த விருதுத் தொகை 140,000 ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது.

2026 தொழிலாளர் தினக் கொண்டாட்டம் சுமார் 30,000 பார்வையாளர்களை ஈர்க்கும்.

தற்போதுள்ள தொழிலாளர்கள், திறன்களை மேம்படுத்துவதன் மூலம் தொழில் முன்னேற்றம், அத்துடன் பல்வேறு ஆதரவு சேவைகளை அணுகுவதன் மூலம் மக்களின் நல்வாழ்வு உள்ளிட்ட முழு தொழில் சூழலமைப்பிலும் உள்ள மக்களின் தேவைகளில் கவனம் செலுத்தும்.

ஒவ்வொரு தனிநபரும் பணி உலகில் நுழைவது, தங்கள் தொழிலில் வளர்வது, சிறந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவிப்பது வரையிலான ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து ஆதரிக்கப்படுவதை உறுதி செய்வதில் கேசுமாவின் முயற்சிகளை இந்த அணுகுமுறை பிரதிபலிக்கிறது.

முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக சொக்சோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொழில்வாய்ப்புத் திருவிழா விளங்குகிறது.

இவ்விழா  MYFutureJobs தளம் வழியாக 2,500 முதல் 16,000 வரையிலான சம்பள வரம்பில் 4,000 வேலை காலியிடங்களை வழங்குகிறது.

வேலை தேடுபவர்களுக்கு நேரடி நேர்காணல்கள், வேலை தேடுபவர்களுக்குத் தொழில் வழிகாட்டுதல் சேவைகளும் இங்கு வழங்குகிறது என்று அமைச்சு ஓர் அறிக்கையில் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset