நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊழல் வழக்கு விசாரணை: முஹைதீன் யாசின் கட்சிக்கு வழங்கப்பட்ட RM19.5 மில்லியன் ரிங்கிட் நிதி குறித்து நீதிமன்றத்தில் பரபரப்புத் தகவல்

கோலாலம்பூர்:

பெர்சத்து கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான முஹைதீன் யாசின் மீதான ஊழல், பணமோசடி வழக்கு விசாரணையில், 'மாம்ஃபர்' (Mamfor) எனும் தனியார் கட்டுமான நிறுவனம் வழங்கிய நிதி குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த 2021, 2022-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சுமார் RM19.5 மில்லியன் ரிங்கிட் தொகையை 29 காசோலைகள் வாயிலாக அந்நிறுவனம் பெர்சத்து கட்சிக்கு வழங்கியுள்ளது. 

இந்தத் தொடர்ச்சியான பெரும் பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் வங்கியின் உள்நிலை ஆய்வில் 'சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள்' என அடையாளப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரசுத் தரப்புச் சாட்சியாக ஆஜரான பேங்க் முவாமலாட் கிளை அதிகாரி நோராசென்டி  மிஸ்வான், ஒரு கட்டுமான நிறுவனம் தனது தொழில் சாராத ஓர் அரசியல் கட்சிக்கு இவ்வளவு பெரிய தொகையைத் தொடர்ந்து வழங்குவது மிகவும் அசாதாரணமானது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

ஒவ்வொரு காசோலையும் RM5 லட்சம் ரிங்கிட் முதல் RM20 லட்சம் ரிங்கிட் வரையிலான மதிப்பைக் கொண்டிருந்ததால், இது குறித்து வங்கியின் தலைமையகத்திற்கு மேல் விசாரணைக்காகத் தகவல் அனுப்பப்பட்டதாக அவர் விளக்கினார்.

மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனம் பெர்சத்து கட்சிக்கு மட்டுமே இத்தகைய பெரும் தொகையை வழங்கியதாகவும், அம்னோ அல்லது ஜசெக போன்ற பிற அரசியல் கட்சிகளுக்கு இவ்வாறு நிதி வழங்கவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். 

இந்த நிதிப் பரிமாற்றங்களின் போது 'அரசியல் நன்கொடை' என்ற வார்த்தை பயன்படுத்தப்படாமல், வெறும் 'நன்கொடை' என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது முஹைதீன் யாசின் மீது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி லஞ்சம் பெற்றது, பணமோசடி செய்தது என மொத்தம் ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற நீதிபதி நூர் ருவேனா முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த விசாரணை, மலேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset