செய்திகள் மலேசியா
700 கி.மீ பாசப் பயணம் சோகத்தில் முடிந்தது: குடும்பத்தைக் காண வந்த அதிகாரி விபத்தில் பலி
ஷா ஆலம்:
தனது குடும்பத்திற்காக ஒவ்வொரு வாரமும் 700 கிலோமீட்டருக்கும் மேல் பயணம் செய்து வந்த மலேசிய குடிவரவுத் துறையின் ஊழியர் ஒருவர் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்ததாகத் தெரிகிறது.
பாதிக்கப்பட்ட அஸ்மான் மஸ்னி, சபாவின் பாப்பாரில் இருந்து, சரவாக்கின் சிபுவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பும் வழியில், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, தனது கடைசி மூச்சை விட்டார்.
எஸ் ஃபைஸ்ஸுல் ஷியர் என்ற அவரது நண்பரின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு உருக்கமான பதிவின்படி, இறந்தவர் பாப்பார் குடிவரவு முகாமில் பணிபுரிந்ததாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
அந்த இளைஞரின் கூற்றுப்படி, இறந்தவரின் வாராந்திர வழக்கம், தனது மனைவி, குழந்தைகள், தாயைச் சந்திப்பதற்காக, மீரி அல்லது சிபுவுக்கு நீண்ட தூரம் பயணிப்பதாகும்.
"இரவு 9.45 மணிக்கு (ஏப்ரல் 25), பாப்பார் குடிவரவு முகாமைச் சேர்ந்த ஒரு நண்பரிடமிருந்து எனக்கு செய்தி வந்தது. மேலும், பிந்துலுவில் உள்ள ஒரு நண்பரிடமிருந்தும் ஒரே நேரத்தில் தொலைபேசி அழைப்பு வந்தது.
"கணவன், தந்தை, மகனின் தியாகம். கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும், பாப்பார் குடிவரவு முகாமில் இருந்து மீரி அல்லது சிபு, சரவாக் வீட்டிற்கு பயணம் செய்தார்.
"மீரியில் பராமரிக்கப்பட வேண்டிய ஒரு தாய் இருந்தார். சிபுவில் ஒரு மனைவியும் குழந்தைகளும் இருந்தனர். இந்தப் பயணம், புரூணை வழியாக 700 கிலோமீட்டருக்கும் மேல் நீண்டது" என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
குடும்பத்திற்கு நெருக்கமாக இருக்கும் வகையில், பணியிட மாற்றத்தைப் பெற இறந்தவர் முன்னர் முயற்சி செய்திருந்ததாக ஃபைஸ்ஸுல் மேலும் கூறினார். இருப்பினும், அவரது விருப்பம் முழுமையாக நிறைவேறுவதற்குள், அவர் இறந்து விட்டார்.
"சபாவிலிருந்து சரவாக் வரையிலான நிலப் பயணம் என்பது மாநிலங்களைக் கடப்பது மட்டுமல்ல, நாடுகளைக் கடப்பதாகும். சில நேரங்களில், ஒருவர் இடமாற்றத்தைக் கோரும்போது, அது வெறும் பொருட்டாக அல்ல, மாறாக, அவருக்காகக் காத்திருக்கும் அன்புக்குரியவர்கள் இருக்கிறார்கள்" என்றார் அவர்.
இறந்தவரின் மறைவு, அவரது சக ஊழியர்களிடையே பெரும் இழப்பாக உணரப்படுவது மட்டுமல்லாமல், சிறுவயதிலிருந்தே அவரது நண்பரான ஃபைஸ்ஸுலுக்கும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
"இது உங்களின் கடைசிப் பயணம் நண்பரே... வீட்டை அடைய இன்னும் சிறிது தூரமே உள்ளது," என்றார் அவர்.
11 மணி நேரப் பயணத்திற்குப் பின்னர், சிபுவில் உள்ள தனது வீட்டை வந்தடைய இறந்தவர் அஸ்மானுக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே இருந்ததாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 28, 2026, 5:38 pm
நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு சட்ட வழிகள் மூலம் தீர்வு காணப்படும்: ஜாஹித்
April 28, 2026, 5:37 pm
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தைக் கலைக்கும் பிரச்சினை எதுவும் எழவில்லை: பிரதமர்
April 28, 2026, 5:35 pm
