நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிபொருள் மானியச் சுமை: ஒரு வினாடிக்கு 2,300 ரிங்கிட் செலவிடும் மலேசிய அரசு

கோலாலம்பூர்: 

மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் மோதலால் தூண்டப்பட்ட உலகளாவிய விநியோக நெருக்கடியின் தாக்கங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக, அரசாங்கம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 8.28 மில்லியன் ரிங்கிட் (ஒரு விநாடிக்கு 2,300 ரிங்கிட்) என்ற பெரும் எரிபொருள் மானியச் சுமையைச் சுமக்கிறது.

கடந்த மார்ச் மாதம் உலக கச்சா எண்ணெய் விலைகளை ஒரு பீப்பாய்க்கு AS$110-ஐத் தாண்டும்படி செய்த உலகளாவிய விநியோக நெருக்கடியின் விளைவாக அரசாங்கம் தற்போது சுமக்கும் இந்த மானியச் செலவு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது.

பிரதமர் துறையின் (பிரதமர் துறையில் உள்ள பொருளாதார ஆலோசகர்) நூர்ஹிஷாம் ஹுசைன், கடந்த மார்ச் மாதத்தில், அரசாங்கம் சுமந்த மானியத் தொகை 6 பில்லியன் ரிங்கிட்டாக இருந்ததாகவும் மேலும் அந்தத் தொகை ஏப்ரலில் 7 பில்லியனாக அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

அந்த பெரிய மானியப் பொறுப்பு நிலையானது அல்ல என்றும், நீண்ட காலத்திற்கு அது நிச்சயமாக நீடிக்காது என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

"ஒரு விநாடிக்கு மானியப் பொறுப்பு 2,300 ரிங்கிட் என்று நான் மதிப்பிட்டேன். ஒவ்வொரு விநாடியும், எரிபொருள் மானியத்திற்காக 2,300 ரிங்கிட் செலவழிக்கிறோம்" என்று சமீபத்தில் புத்ராஜெயாவில் பிஎச் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

விநியோகப் பற்றாக்குறை, அதிக உலக எண்ணெய் விலைகள் காரணமாக, வாழ்க்கைச் செலவு உயர்வு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில், அது சுமக்கும் மானியச் சுமை குறித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு பேசினார்.

முக்கிய வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை முன்பு இருந்த நிலையில் மீண்டும் திறக்கப்பட்டாலும், மேற்கு ஆசியாவில் இருந்து எண்ணெய் உற்பத்தி மீள நேரம் எடுக்கும் என்பதால், உலகளாவிய விநியோக நெருக்கடி ஒரு முக்கிய கவலையாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

கப்பல் பாதைகளை மீண்டும் திறப்பது, எண்ணெய் விநியோகம் உடனடியாக மீண்டும் வரும் என்பதை அர்த்தப்படுத்தாது என்றார் அவர். ஏனெனில், பல எண்ணெய் கிணறுகள் மூடப்பட்டு சில பாதுகாப்பு நடவடிக்கையாக கான்கிரீட் மூலம் சீல் வைக்கப்பட்டுள்ளன.

"இந்தக் கிணறுகளை மீண்டும் செயல்படுத்தும் செயல்முறை, சேதத்தின் அளவு, பகுதியின் பாதுகாப்பைப் பொறுத்து, மூன்று முதல் ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"கோவிடட்-19 தொற்றுநோயின் போது, விநியோகத்தை மீட்டெடுக்க 18 மாதங்கள் வரை ஆனது. எனவே, நீண்ட காலத்திற்கு உலக எண்ணெய் விநியோகம் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார் அவர்.

பணவீக்க விளைவுகள் குறித்து, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வெளிப்புறக் காரணிகளால் நிச்சயமாக பணவீக்கம் ஏற்படும் என்று நூர்ஹிஷாம் ஒப்புக்கொண்டார்.

அடிப்படைப் பொருட்களின் விலைகளின் மீதான விளைவுகளைச் சமாளிப்பதற்காக, போக்குவரத்துச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம், நாட்டில் பணவீக்க விளைவுகளைக் குறைக்க முடியும் என்றார் அவர்.

தற்போதைக்கு, பெட்ரோனாஸ்  உறுதியளித்துள்ளபடி, இந்த ஜூன் வரை நாட்டில் எரிபொருள் விநியோகம் இன்னும் போதுமானதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset