நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“விலங்குகள் மீது ஏன் இத்தனை வன்மம்?”: நாய்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு விலங்கு நல அமைப்புகள் கண்டனம்

குவாந்தான்: 

பஹாங், பெக்கான் மாவட்டத்தில் உள்ள பாலோ ஹினாய் பகுதியில், ஏழு தெருநாய்களுக்கு விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் விலங்கு ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இந்த விலங்குகள் மீது இத்தகைய கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது எனப் பஹாங் தெருப்பூனைகளின் நண்பர்கள் அமைப்பு (SKJP) தெரிவித்துள்ளது. 

சில தனிநபர்கள் விலங்குகள் மீதான தங்களின் வெறுப்பை வெளிப்படுத்த இத்தகைய குறுக்குவழிகளைக் கையாளுவது மனிதநேயமற்ற செயல் என்று அந்த அமைப்பின் தலைவர் ஜூரினா அப்துல் ராணி சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட நாய்கள் உணவில் நச்சுப் பொருட்கள் கலந்து கொடுக்கப்பட்டதன் காரணமாகவே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து எளிதில் தப்பி விடுவதாகவும், இதுவே இத்தகைய சம்பவங்கள் தொடரக் காரணம் என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார். 

குறிப்பாக, கட்டுமானத் தளங்களில் காவல் பணிகளுக்காக விலங்குகளைப் பயன்படுத்திவிட்டு, பணிகள் முடிந்தவுடன் அவற்றைப் பராமரிக்காமல் அப்படியே விட்டுச் செல்லும் மனிதர்களின் பொறுப்பற்றத் தன்மையே தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம் என்று அவர் விளக்கினார்.

இதனைக் கருத்தில் கொண்டு, கட்டுமான நிறுவனங்கள் விலங்குகளைப் பயன்படுத்தும் போது அவற்றுக்கானப் பதிவு, முறையான பராமரிப்பை உறுதி செய்ய உள்ளூர் அதிகார அமைப்புகள் சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், விலங்கு நலச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஊடகங்கள் வாயிலாக மக்களிடையே பரப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். "விலங்குகளுக்கு நம்மால் அன்பு செலுத்த முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் அவற்றைத் துன்புறுத்தாமல் இருக்க வேண்டும்" என்பதே விலங்கு நல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset