செய்திகள் மலேசியா
போலிசார் ஒருவரின் தலையில் மிதித்த சம்பவம் அப்பட்டமான வன்முறை: வழக்கறிஞர் ராஜேஷ்
கோலாலம்பூர்:
சட்டத்திலிருந்து தங்களுக்கு விலக்கு உண்டு என்று கருதுவதால்தான் போலிசார் ஒருவரின் தலையை மிதித்துள்ளார்.
இச்சம்பவம் அப்பட்டமான வன்முறையாகும் என்று வழக்கறிஞர் ராஜேஷ் நாகஜரன் கூறினார்.
மலாக்காவின் டுரியான் துங்காலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், போலிசார் தாங்கள் சட்டத்திலிருந்து விலக்கு பெற்றவர்கள் என்று தொடர்ந்து நம்பும் அபாயம் உள்ளது.
கெடாவின் கூலிம் நகரில் ஒரு காவல்துறை அதிகாரி ஒருவரின் தலையை மிதிப்பதைக் காட்டும் வைரலான சம்பவம் உட்பட, நடைமுறை மீறல்கள் எனக் கூறப்படும் பல சம்பவங்களைத் தொடர்ந்து இந்தக் கருத்து வலுப்பெற்றுள்ளது.
உதாரணமாக டுரியன் துங்கால் வழக்கில் நடந்தது போல் போலிஸ் அதிகாரிகள் தங்கள் செயல்களுக்குப் பொறுப்பேற்க மாட்டார்கள் என்று நம்பும்போது, சட்டபூர்வமான, அத்துமீறிய பலப்பிரயோகத்திற்கு இடையிலான கோடு மறைந்துவிடுகிறது.
ஒருவரின் தலையில் மிதிப்பது போலிசாரின் வேலை அல்ல. அது அப்பட்டமான வன்முறையாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, சமூக ஊடகங்களில் வைரலான 29 வினாடிகள் கொண்ட காணொளிக் காட்சியைத் தொடர்ந்து, குலிம் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியன் இஸ்மாயில் உத்தரவிட்டார்.
அந்தக் காணொளிக் காட்சியில், இரு காவல்துறை அதிகாரிகள் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே இழுக்கப்பட்ட ஒருவரைக் கைது செய்வதும், பின்னர் அவர்களில் ஒருவர் அந்த சந்தேக நபரின் தலையில் மிதிப்பதும் காணப்பட்டது.
மேலும் விவரித்த ராஜேஷ், சட்ட அமலாக்க நடவடிக்கைகளிலிருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பின் அளவைக் கேள்விக்குள்ளாக்கினார்.
போலிசாரிடம் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?. தன்னிச்சையான, வரம்பு மீறிய அரசு அதிகாரத்திற்கு எதிரான நமது அரசியலமைப்புப் பாதுகாப்பு எங்கே?.
ஆக இவ்விவகாரத்தில் விரைவான விசாரணை அவசியம். ஆனால் அது மட்டும் போதாது.
பொதுமக்கள் விரும்புவது உண்மையான நடவடிக்கைகளே என்று அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 3:15 pm
பினாங்கு அரசு ஊழியர்கள் இனி வீட்டிலிருந்து பணிபுரிய மாட்டார்கள்: முதலமைச்சர்
April 22, 2026, 3:02 pm
ஜாலான் செமினியில் அடுத்தடுத்து விபத்துகள்
April 22, 2026, 1:53 pm
