நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நியத் தொழிலாளர் ஆட்சேர்ப்பு முறை: முன்னாள் அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு டத்தோஶ்ரீ ரமணனின் அரசியல் செயலாளர் கடும் கண்டனம்

கோலாலம்பூர்:

அந்நியத் தொழிலாளர் மையப்படுத்தப்பட்ட மேலாண்மை அமைப்பு (FWCMS), முன்மொழியப்பட்டுள்ள ‘துராப்’ ஆட்சேர்ப்புத் தளம் குறித்து முன்னாள் அமைச்சர்கள் இருவர் முன்வைத்துள்ள விமர்சனங்களுக்கு, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் அரசியல் செயலாளர் ஐசுடின் அப்துல் காஃபல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2031-ஆம் ஆண்டு வரை FWCMS ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கான முடிவு 2024 ஜூன் 24 அன்று எடுக்கப்பட்டபோது, தற்போது விமர்சனங்களை முன்வைக்கும் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி,  நிக் நஸ்மி நிக் அகமது ஆகியோர் அமைச்சரவையில் முறையே பொருளாதார அமைச்சராகவும், இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

அதிகாரம், தகவல் அறியும் வாய்ப்பு மற்றும் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு ஆகியவற்றைக் கொண்டிருந்த அந்த அமைச்சர்கள், முடிவெடுக்கும் மேசையில் இருந்தபோது ஏன் இந்த பலவீனங்களைச் சுட்டிக்காட்டவில்லை என்று ஐசுடின் நேற்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்போது குற்றம் சாட்டப்படும் குறைபாடுகள் உண்மையிலேயே தீவிரமானவை என்றால், அவை ஏன் அப்போதே பேசப்படவில்லை.

தற்போது பதவி விலகிய பிறகு குரல் கொடுப்பது ஏன் என்று அவர் வினவினார்.

மேலும் இது வெறும் கருத்து வேறுபாடு மட்டுமல்ல, அரசியலில் நேர்மை மற்றும் நிலைத்தன்மை குறித்த கேள்வி என்று அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.

FWCMS அமைப்புடன் தேசிய ஒருங்கிணைந்த குடிவரவு அமைப்பு (NIISe) ஒன்றுடன் ஒன்று மோதும் அபாயம் இருப்பதாக பொதுக் கணக்குக் குழு (PAC) ஏற்கனவே எச்சரித்திருந்தும், அமைச்சரவையில் இருந்தபோது இவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

அதிகாரத்தில் இருந்தபோது மௌனம் காத்துவிட்டு, பொறுப்பிலிருந்து விலகிய பிறகு வெளிப்படையாகப் பேசுவது அரசியல் நயவஞ்சகத்தையே காட்டுகிறது என்று அவர் விமர்சித்தார்.

அமைச்சரவையில் இருந்தபோது அவர்களாலேயே அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பு, இப்போது எப்படி அவர்களது விமர்சனத்திற்கு உள்ளாகிறது என்பது குழப்பமளிப்பதாகவும், இது இதுவரை கண்டிராத ஒரு புதிய வகை அரசியல் தந்திரம். 

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆக்கபூர்வமான விமர்சனங்களை மலேசியர்கள் மதிக்கிறார்கள்.

அந்தச் சரிபார்ப்புகள் உண்மைகளின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காகத் திரித்துச் சொல்லப்படும் கதைகளாக இருக்கக்கூடாது என்று ஐசுடின் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset