செய்திகள் இந்தியா
இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி
புதுடெல்லி:
மக்களவை, சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் போதிய ஆதரவு கிடைக்காததால் தோல்வி அடைந்தது.
கடந்த 2023-ம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்களை 850 ஆக அதிகரிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டது.
இதற்காக, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதற்காக அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகியவை மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த 3 மசோதாக்களுக்கும் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் தொடக்கத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மசோதா மீதான விவாதம் நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. இந்நிலையில், மக்களவையில் நேற்று காலை விவாதம் தொடர்ந்தது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பேசினர். கனிமொழி, ஆ.ராசா (திமுக), சசி தரூர், ஜோதிமணி (காங்கிரஸ்), மிதுன் ரெட்டி (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்), ராஜீவ் ரஞ்சன் சிங் (ஐஜத), கல்யாண் பானர்ஜி (திரிணமூல் காங்கிரஸ்), ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு (தெலுங்கு தேசம்), டிம்பிள் யாதவ் (சமாஜ்வாதி), ஹர்சிம்ரத் கவுர் பாதல் (சிரோமணி அகாலி தளம்), ஹேமமாலினி (பாஜக) உள்ளிட்ட எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பதில் அளித்தனர்.
பிரதமர் மோடி வேண்டுகோள்:
இதற்கிடையே, மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பை முன்னிட்டு எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
‘மகளிர் இடஒதுக்கீடு விஷயத்தில் கடந்த 40 ஆண்டுகளாக அரசியல் செய்யப்பட்டு வந்தது. சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் ஆனபிறகும், முடிவு எடுக்கும் விஷயத்தில் மகளிருக்கு குறைந்தபட்ச பிரதிநிதித்துவம்கூட தரப்படவில்லை.
இது சரியான நடவடிக்கை அல்ல. நாட்டின் மக்கள்தொகையில் பாதியளவு இருக்கும் மகளிர் தங்களது உரிமைகளைப் பெறவேண்டிய நேரம் வந்துள்ளது. இந்த மசோதா குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு, சரியான பதில்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
உங்களது தாய், சகோதரி, மனைவி, மகள் ஆகியோரை நினைத்துப் பார்த்து, மகளிர் இடஒதுக்கீடு மசோதா விஷயத்தில் மனசாட்சிப்படி முடிவு எடுக்க வேண்டும். மகளிருக்கு அதிகாரம் அளிக்க நமக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, அவர்களுக்கான புதிய வாய்ப்புகளை பறிக்காதீர்கள். தயவுசெய்து உரிய பரிசீலனை செய்து, முழுஉணர்வுடன் முடிவு எடுத்து, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்க வேண்டும்’ என்று அதில் பிரதமர் தெரிவித்திருந்தார்.
அமித்ஷா விளக்கம்:
மக்களவையில் மசோதா குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கிப் பேசினார். தொகுதி மறுசீரமைப்பின் முடிவில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு எத்தனை தொகுதிகள் அதிகரிக்கும் என்ற பட்டியலையும் அவர் வெளியிட்டார்.
தொகுதி மறுசீரமைப்பு காரணமாக தென் மாநிலங்களுக்கு அதிக இழப்பு ஏற்படும் என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. இத்துடன், மறுவரையறை மூலம் தொகுதிகள் எண்ணிக்கை 850 ஆக அதிகரிக்கப்படும்போது எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு தொகுதிகள் அதிகரிக்கும் என்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.
‘‘தமிழகத்துக்கு தற்போது 39 எம்.பி. தொகுதிகள் உள்ள நிலையில் தொகுதி மறுவரையறைக்கு பின்னர் இந்த எண்ணிக்கை 59 ஆக உயரும். இதேபோல, எம்.பி. தொகுதிகள் எண்ணிக்கை கேரளாவில் 20-ல் இருந்து 30 ஆகவும், ஆந்திராவில் 25-ல் இருந்து 38 ஆகவும், கர்நாடகாவில் 28-ல் இருந்து 42 ஆகவும் உயரும். தொகுதி மறுவரையறையால் தமிழகத்துக்கு எந்தவித இழப்பும் ஏற்படாது. மக்களவையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 7.18-ல் இருந்து 7.23 சதவீதம் ஆக அதிகரிக்கும்.
தொகுதி மறுவரையறை ஆணையத்தின் அறிக்கை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகே அமல்படுத்தப்படும்.
2029-க்கு முன்பு வரை தற்போது இருக்கும் இடங்களின் எண்ணிக்கையிலேயே அனைத்து தேர்தல்களும் நடைபெறும்’’ என்று அமித் ஷா பேசினார்.
போதிய ஆதரவு இல்லை: அவர் பேசி முடித்ததும், மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 528 எம்.பி.க்கள் வாக்களித்தனர். மசோதாவுக்கு ஆதரவாக 298 பேரும், எதிராக 230 பேரும் வாக்களித்தனர். மசோதா நிறைவேற மூன்றில் 2 பங்கு ஆதரவு தேவை. அதாவது, மக்களவையில் 352 எம்.பி.க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே மசோதாவை நிறைவேற்ற முடியும்.
ஆனால் 298 பேர் மட்டுமே ஆதரவாக வாக்களித்ததால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்தது.
நேற்றைய வாக்கெடுப்பின்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா மட்டுமே வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மற்ற 2 மசோதாக்கள் மீதும் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது: நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று தோல்வி அடைந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் அவசரக் கூட்டம் நடைபெறுகிறது. முக்கிய விவகாரங்களில் கொள்கை முடிவுகள், நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
