நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தவறான முகவரியால் நேர்ந்த விபரீதம்: அப்பாவி குடும்பத்தின் வீடு, கார் மீது சிவப்புச் சாயம் வீச்சு

தம்பின்:

தம்பின், தாமான் இண்டா பகுதியில் வசிக்கும் ஆறு பேர் கொண்ட குடும்பத்தினர், அடையாளம் தெரியாத நபர்களால் தங்கள் வீட்டின் மீது சிவப்புச் சாயம் வீசப்பட்ட சம்பவத்தால் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில், வீட்டின் வெளியே கேட்ட சத்தத்தைக் கேட்டு எழுந்த ஹாவ் ஹுய் சிங் (42) என்பவர், தனது வீடும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரும் சிவப்புச் சாயத்தால் நனைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இச்சம்பவம் குறித்துப் பேசிய ஹுய் சிங், கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதியானதாகத் தெரிவித்தார். 

"நானோ, என் கணவரோ அல்லது எனது மாமனார், மாமியாரோ யாரிடமும் கடன் வாங்கவில்லை. கடன் கொடுத்தவர்கள் யாரோ ஒருவரின் முகவரி எனத் தவறாகக் கருதி எங்கள் வீட்டைத் தாக்கியுள்ளனர் என்று நம்புகிறோம்," என அவர் வேதனையுடன் கூறினார்.

இந்தச் செயலால் தனது 10, 13 வயது சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ள அவர், இதயம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது மாமனாரின் உடல்நலம் இந்த மன உளைச்சலால் பாதிக்கப்படக்கூடும் என்றும் அஞ்சுகிறார். 

அக்கம் பக்கத்தினரும் இதனால் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஏதேனும் புரிதல் குறைபாடுகள் இருந்தால், தனது கணவர் ஃபூ யிங் ஹாவ் என்பவரை 012-2711007 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நிம்மதியற்ற சூழலில் தவிக்கும் இக்குடும்பத்தினர், சம்பந்தமில்லாத தங்களை வம்புக்கு இழுக்க வேண்டாம் என்றும், இதற்கொரு சுமூகத் தீர்வை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset