நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜப்பான் பாணியில் மலேசியக் கல்விமுறை: மாணவர்களிடையே ஒழுக்கத்தை வளர்க்கப் பிரதமரின் அதிரடித் திட்டம்

குவாந்தான்: 

பள்ளி மாணவர்கள் தங்களின் பள்ளி கழிப்பறைகளைச் சுத்தப்படுத்தும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அண்மையப் பரிந்துரை, மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இது வெறும் தூய்மைப் பணி மட்டுமல்லாமல், சிறு வயது முதலே மாணவர்களிடையே நற்பண்பு, ஒழுக்கம், பொறுப்புணர்வை வளர்ப்பதற்கான ஓர் அடிப்படை முயற்சியாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதாரப் பின்னணியைப் பாராமல் 'பணக்கார வீட்டுப் பிள்ளை' அல்லது 'சாதாரண வீட்டுப் பிள்ளை' என்ற பாகுபாடின்றி, அனைத்து மாணவர்களும் இத்தகைய அடிப்படைப் பணிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். 

குவாந்தானில் நடைபெற்ற 'மடானி பஹாங் பிள்ளைகள் சங்கமத்தில்' உரையாற்றிய அவர், கோலா கங்சார் மலாய் கல்லூரியில் தாம் பயின்றபோது இத்தகைய தூய்மைப் பணிகள் நடைமுறையில் இருந்ததை முன்மாதிரியாகக் குறிப்பிட்டார். 

இதன் மூலம் தூய்மைப் பணியாளர்களின் கஷ்டங்களை மாணவர்கள் உணர்வதோடு, பிறர் உழைப்பை மதிக்கும் மனப்பாங்கும் வளரும் என்பது அவர் கருத்தாகும்.

இந்த முன்னெடுப்பிற்குப் பெற்றோர்களிடையே ஆதரவும், கவலையும் கலந்த கருத்துகள் எழுந்துள்ளன. ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் இம்முறை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டிச் சிலர் வரவேற்றாலும், முறையான உபகரணங்கள், பாதுகாப்பு வழிகாட்டிகளுடன் இத்திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் எனப் பெற்றோர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

மேலும், இது தூய்மைப் பணியாளர்களின் வேலையைப் பறிப்பதாக இருக்கக் கூடாது என்பதும் சிலரின் கருத்தாக உள்ளது.

இறுதியாக, இத்திட்டம் ஒரு தண்டனையாகப் பார்க்கப்படாமல், மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கான ஒரு கல்வி முறையாகவே அணுகப்பட வேண்டும்.

தேர்வுகள், மதிப்பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் தற்போதைய கல்வி முறையில், இத்தகைய நடைமுறைப் பயிற்சிகள் மாணவர்களிடையே ஒத்துழைப்பு, சுயசார்புத் தன்மையை உருவாக்கும்.

சரியான திட்டமிடலுடன் செயல்படுத்தப்பட்டால், இது வருங்காலச் சந்ததியினரைச் சிறந்த குடிமக்களாக மாற்றும் என்பதில் ஐயமில்லை.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset