நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தன் மீதான ஐந்து குற்றச்சாட்டுகளை பிள்ளைகள் பராமரிப்பு மையத்தின் உரிமையாளர் மறுத்தார்

செலயாங்:

தன் மீதான ஐந்து குற்றச்சாட்டுகளை பத்துகேவ்ஸில் உள்ள பிள்ளைகள் பராமரிப்பு மையத்தின் உரிமையாளர் மறுத்துள்ளார்.

சம்பந்தப்பட்ட இல்லத்தில்  வசிக்கும் நான்கு குழந்தைகளைத் துன்புறுத்தியது.

பதிவு செய்யப்படாத பராமரிப்பு மையத்தை நடத்தியது உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளின் பேரில், இங்குள்ள செஷன்ஸ், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் அவர்  ஆஜர்படுத்தப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவரான 31 வயது எஸ். வேலன், நீதிபதி நோராஸ்லின் ஓத்மான், மாஜிஸ்திரேட் சாய் குவான் ஹாக் ஆகியோர் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் தன் குற்றத்தை மறுத்தார்.

செஷன்ஸ்  நீதிமன்றத்தில், 11,  17 வயதுடைய இரண்டு சிறுவர்கள், எட்டு,  16 வயதுடைய இரண்டு சிறுமிகள் என நான்கு பாதிக்கப்பட்டவர்களைப் பொறுப்பில் வைத்திருந்த பராமரிப்பு மையத்தின் பாதுகாவலராக இருந்த அவர், அவர்களுக்கு உடல்ரீதியான தீங்கு விளைவிக்கும் அளவிற்குத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

இந்தக் குற்றம் 2023 , 2025-க்கு இடையில், பத்து கேவ்ஸில் உள்ள தாமான் செலாயாங் பெர்மாத்தாவில் உள்ள ஒரு பராமரிப்பு மையத்தில், நான்கு வெவ்வேறு பாதிக்கப்பட்டவர்களை உள்ளடக்கி நடந்ததாகக் கூறப்படுகிறது.

2001ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(ஏ)-ன் கீழ் இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இப்பிரிவின்படி, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 50,000 ரிங்கிட் அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிலாங்கூர் விழிப்புணர்வு அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கீர்த்தன் சுப்பிரமணியம், இந்த வழக்கில் சட்டத்தின் கீழ் நான்கு தனித்தனி குற்றச்சாட்டுகள் உள்ளதாகக் கூறினார்.

அவரது கூற்றுப்படி, அரசுத் தரப்பு ஆரம்பத்தில் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 20,000 ரிங்கிட் பிணைத்தொகை வழங்கப் பரிந்துரைத்தது.

ஆனால் நீதிமன்றம் கூடுதல் நிபந்தனைகளுடன் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும்  10,000  ரிங்கிட் பிணைத்தொகையை அனுமதித்தது.

விசாரணை முழுவதும் பாதிக்கப்பட்டவரையோ அல்லது சாட்சிகளையோ தொந்தரவு செய்யாமல், ஒவ்வொரு மாதமும்  போலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உத்தரவிடப்பட்டது என்று அவர் கூறினார்.

இந்த வழக்கின் தீவிரத்தன்மையையும், இது பொதுமக்களின் கவனத்தைப் பெற்றிருப்பதையும் கருத்தில் கொண்டு, துணை அரசு வழக்கறிஞர் கமரூல் இமான் அஹ்மத் சப்பியன் முன்னதாக அதிக பிணைத்தொகைக்கு விண்ணப்பித்திருந்தார்.

முன்னதாக  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஏப்ரல் 3 ஆம் தேதி இரவு சுமார் 8 மணியளவில் அதே இடத்தில் பதிவு செய்யப்படாத குழந்தை பராமரிப்பு மையத்தை இயக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கும் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றமற்றவர் என வாதிட்டார்.

இந்தக் குற்றச்சாட்டு, 1993 ஆம் ஆண்டின் குழந்தை பராமரிப்பு மையங்கள் சட்டத்தின் பிரிவு 5(1)-இன் கீழ் சுமத்தப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset