நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போர் பதற்றத்தால் உயரும் விலைவாசி: பல்கலைக்கழக மாணவர்களுக்குச் சுமை ஏற்படாமல் காக்க அதிரடி நடவடிக்கை

ஷா ஆலம்: 

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள், உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், தனது பல்கலைக்கழக மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க யூ.ஐ.டி.எம் (Universiti Teknologi Mara) நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

நாடு முழுவதுமுள்ள 300-க்கும் மேற்பட்ட வளாகங்களில் உள்ள உணவகங்களில், உணவின் விலை, தூய்மையை முறையாகக் கண்காணிக்கப் போவதாகப் பல்கலைக்கழகம் உறுதியளித்துள்ளது.

இது குறித்துப் பேசிய மாணவர் நலப் பிரிவு துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் முஹம்மத் சசிலி ஷாஹிபி, அனைத்துப் புலங்களின் உணவகங்கள், தங்கும் விடுதி உணவுக்கூடங்கள், விளையாட்டு வளாகங்களில் உள்ள உணவு விற்பனை நிலையங்கள் இந்தத் தீவிர கண்காணிப்பின் கீழ் வரும் என்று தெரிவித்தார். 

விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உணவின் தரம், சுகாதாரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்படாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

பொருளாதாரச் சூழலால் மாணவர்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முதன்மை நோக்கமாகும். அதே வேளையில், உணவு விற்பனையாளர்கள் நஷ்டமடையாமல் இருப்பதையும், மாணவர்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் உணவு கிடைப்பதையும் உறுதி செய்ய ஒரு சமநிலையான அணுகுமுறை கடைப்பிடிக்கப்படும். இதற்காக உணவு விரயத்தைத் தவிர்க்கும் முறையான திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன.

ஷா ஆலமில் நடைபெற்ற புதிய உணவகத் திறப்பு விழாவின் போது இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன. இந்நிகழ்வில் துணைப் போலிஸ் படைத் தலைவர், முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 

உலகளாவிய அரசியல் சூழலால் ஏற்படும் விலை ஏற்றத்திலிருந்து மாணவர்களின் ‘பணப்பையை’ (Pocket) பாதுகாப்பதில் யூ.ஐ.டி.எம் உறுதியாக இருப்பதாக நிர்வாகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset