நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

எரிவாயு கசிவால் வெடித்துச் சிதறிய சுத்திகரிப்பு நிலையம்: 60 மீட்டர் உயரத்திற்கு எழும்பிய தீப்பிழம்புகள்

கீலாங்: 

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்திலுள்ள விவா (Viva) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தொடர் வெடிப்பு, பெரும் தீ விபத்தால், நாட்டின் எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக, சுமார் 60 மீட்டர் உயரத்திற்குத் தீப்பிழம்புகள் எழும்பின. நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் 10 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் இந்த ஆலை தீக்கிரையானது, ஆஸ்திரேலியாவுக்குப் பெரும் பொருளாதாரச் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்துப் பேசிய எரிசக்தி துறை அமைச்சர் கிறிஸ் போவன், சுத்திகரிப்பு நிலையத்தின் ஒரு பகுதி முற்றிலும் அழிந்துவிட்டதால், பெட்ரோல் உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

இருப்பினும், பாதுகாப்புத் தடுப்பிகள் (Safety valve) சரியான நேரத்தில் செயல்பட்டதால், விமான எரிபொருள், டீசல் உற்பத்திப் பிரிவுகள் தப்பின. மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவும் வேளையில், இந்த விபத்து நிகழ்ந்திருப்பது உலகளாவிய விநியோகச் சங்கிலியில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, ஆஸ்திரேலியாவிடம் 38 நாட்களுக்கு மட்டுமே தேவையான பெட்ரோல் கையிருப்பு உள்ளது. இது சர்வதேச எரிசக்தி முகமை நிர்ணயித்துள்ள 90 நாட்கள் என்ற அளவை விட மிகக் குறைவாகும். 

இதனால், பொதுமக்கள் பதற்றமடைந்து எரிபொருளைக் குவித்து வைக்க வேண்டாம் என்றும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் பெட்ரோலைப் பயன்படுத்துமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் தரப்பிலிருந்து ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்து ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆலை விபத்து ஆஸ்திரேலியாவின் எரிசக்தி பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரத் தீயணைப்புப் படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset