நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு மத்தியிலும் காசாவில் ரத்த ஆறு: குழந்தைகள் உட்பட 11 பேர் பலி

கெய்ரோ:

காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய பல்வேறு தாக்குதல்களில், இரண்டு சிறுவர்கள் உட்பட குறைந்தது 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில் இந்த வன்முறைச் சம்பவங்கள் அமைந்துள்ளன. 

காசா நகரில் காவல்துறை வாகனத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் யாஹ்யா அல்-மலாஹி என்ற மூன்று வயது சிறுவன் உட்பட நால்வர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் ஒரு காவல்துறை அதிகாரியும் கொல்லப்பட்டதோடு, ஒன்பது பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.

காசாவின் வடக்குப்பகுதியில் உள்ள ஜபாலியா அருகே இஸ்ரேலியப் படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். அதேபோல், கடற்கரை முகாம் பகுதியில் உள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 

இது ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் அல்-ஷிபா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், உறவினர்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த அக்டோபர் மாதம் முதல் நடைமுறையில் உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஹமாஸ் தலைமையிலான பாதுகாப்புப் படைகளைக் குறிவைத்து இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. 

காசாவில் குழப்பத்தை விளைவிக்கவே இஸ்ரேல் இவ்வாறு செயல்படுவதாகப் பாலஸ்தீனத் தரப்பு குற்றம் சாட்டுகிறது. அதேவேளையில், ஹமாஸ் அமைப்பின் தாக்குதல் முயற்சிகளை முறியடிக்கவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக இஸ்ரேல் வாதிடுகிறது.

ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு இதுவரை 750-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போர்நிறுத்த விதிகளை மீறுவதாக இஸ்ரேலும் ஹமாஸும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர். இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் சட்டவிரோதமாக விரிவாக்கம் செய்வதாகப் பாலஸ்தீனியர்கள் குற்றம் சாட்டும் நிலையில், அதனை இஸ்ரேலியத் தரப்பு மறுத்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset