நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவிற்குள் ஊடுருவ முயற்சி: சட்டவிரோதக் குடியேறிகள் மீது தாய்லாந்து பாதுகாப்புப் படை அதிரடி நடவடிக்கை

கோத்தா பாரு: 

மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் நோக்கில், தாய்லாந்தின் சொங்க்லா மாநிலக் காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த 80-க்கும் மேற்பட்ட மியான்மர் நாட்டினரைத் தாய்லாந்து பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

மலேசிய எல்லையை ஒட்டியுள்ள நா மோம் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாகக் கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் மலேசியாவில் வேலை தேடி வருவதற்காகத் தரகர்களிடம் நபர் ஒருவருக்கு 79,000 பாட் முதல் 150,000 பாட் பெருந்தொகையை வழங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுமார் 6 நாட்களுக்கு முன்பு மியான்மரின் கயின் (Kayin) மாநிலத்திலிருந்து புறப்பட்ட இவர்கள், முறையான பயண ஆவணங்கள் எதுவுமின்றி சட்டவிரோதப் பாதைகள் வழியாகத் தாய்லாந்திற்குள் ஊடுருவியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மரங்களுக்கு அடியில் தற்காலிகக் கூடாரங்களை அமைத்துப் பதுங்கியிருந்த ஆண்கள், பெண்கள் உட்பட அனைவரையும் சுற்றி வளைத்தனர். பிடிபட்டவர்கள் அனைவரும் தற்போது மேலதிக விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் மனிதக் கடத்தல் கும்பலால் பாதிக்கப்பட்டவர்களா என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் முடிவடைந்து அனைவரும் மீண்டும் தங்களின் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று தாய்லாந்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset