நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெல்லை ஜெயந்தாவின் இலக்கியச் சொற்பொழிவுடன் சிங்கப்பூர் ஆண்டியப்பனின் நூல் வெளியீடு: மஇகா தலைமையகத்தில் நடைபெறுகிறது

கோலாலம்பூர்:

தமிழ் இலக்கிய உலகில் மறக்க முடியாத ஒரு சிறப்புநிகழ்வாக, சிங்கப்பூர் தமிழ்ச் சிந்தனையின் செழுமையை வெளிப்படுத்தும் வாமனத் தீவு, சிங்கப்பூரின் வரலாற்றுத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

1970களின் பிற்பகுதியிலும் 1980களின் முற்பகுதியிலும் தமிழ் மலர் மற்றும் தினமணி நாளிதழ்களில் துணை முதன்மை ஆசிரியராகப் பணியாற்றி, தனது எழுத்துத் திறமையால் வாசக மனங்களில் அழியாத முத்திரை பதித்தவரும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள்  தலைவருமான . நா. ஆண்டியப்பன் எழுதிய இந்நூல், சிங்கப்பூரின் வரலாற்றைத் தமிழ்ச் செம்மையுடன் சித்தரிக்கும் முக்கியமான படைப்பாகும்.

இந்நூல் வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 6.00 மணிக்கு மஇகா தலைமையத்தில் உள்ள நேதாஜி அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இவ் விழா மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தலைமையில் நடைபெறவுள்ளது.

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைமைச் செயல் முறை அதிகாரி டத்தோ பா. சகாதேவன் முன்னிலை வகித்து முதல் நூலைப் பெற்றுக் கொள்வார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க அயலகக் குழுத் தலைவர் பெ. இராஜேந்திரன் வரவேற்புரை ஆற்ற, சங்கத்தின் முன்னாள் தலைவர் மன்னர் மன்னன் மருதை நூல் அறிமுகம் செய்வார். சிங்கப்பூர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ வாழ்த்துரை வழங்குவார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர், பாடலாசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர் நெல்லை ஜெயந்தா அவர்களின், பாட்டுடைத் தலைவன் வாலி இலக்கியச் சொற்பொழிவு இடம் பெறுகிறது.

எதுகை, மோனை நயங்களால் செழுமை பெறும் கவிதை நடையில் பேசும் தனித்திறன் கொண்டவர் நெல்லை ஜெயந்தா.

மேடைப் பேச்சிலும், கவிதை வடிவாக்கத்திலும் சம அளவு வல்லமை பெற்ற இவர், தனது சொற்களால் சிந்தனையைச் செதுக்கி, உணர்வுகளை உயிர்ப்பிக்கும் வல்லுநர். கலைமாமணி விருது பெற்ற இவரின் நீ நனைத்த பனித்துளிகள், தொட்டிலோசை, வாலிப வாலி, நிலா வனம் போன்ற நூல்கள், இளைஞர்களின் உள்ளங்களைத் தொட்டுச் சென்றவை.

சமூக உணர்வும், காதல் நயமும், வாழ்க்கை தத்துவமும் கலந்து ஒலிக்கும் இவரது படைப்புகள், சமகாலத் தமிழ்க் கவிதை உலகில் தனித்த அடையாளம் பெற்றவை.

கவிதை பேசும் பேச்சாளர், பேச்சே கவிதையாக மாறும் கலைஞர், இவ்விரண்டையும் ஒரே உடலில் தாங்கி நிற்கும் அரிய ஆளுமை நெல்லை ஜெயந்தா.  அவரது சொற்பொழிவு, கேட்போரின் உள்ளங்களில் இலக்கியத்தின் இனிமையை விதைக்கும் என்பது உறுதி.

தமிழின் வரலாறும், இலக்கியத்தின் வளமும், சிந்தனையின் செழிப்பும் ஒன்றிணையும் இந்நிகழ்வில், அனைத்து இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset