நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி: இந்தோனேசியச் சிறுவர்களைப் பெற்றோரிடம் ஒப்படைக்க ஜொகூர் அரசு தீவிரம்

ஜொகூர் பாரு: 

ஜொகூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சிறுவர் பாலியல் வன்கொடுமை வழக்கால் பாதிக்கப்பட்ட மூன்று இந்தோனேசியச் சிறுவர்கள், விரைவில் அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். 

அவர்களின் உறவினர்களைக் கண்டறியும் முயற்சி வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஜொகூர் மாநில அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய மாநில மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் தலைவி கைரின் நிசா இஸ்மாயில், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உறவினர்களை இந்தோனேசியத் தூதரகத்தின் உதவியுடன் அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்தார். 

மரபணு சோதனையின் மூலம் உறவினர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காவல்துறையின் இறுதி விசாரணை முடிந்ததும் அச்சிறுவர்கள் இந்தோனேசியாவிற்கு அனுப்பப்படுவார்கள். தற்போது, பாதிக்கப்பட்ட 11 மாதக் குழந்தை முதல் 5 வயது வரையிலான ஏழு குழந்தைகள் சமூக நலத்துறையின் பாதுகாப்பில் உள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தத்தெடுப்பதாகக் கூறி பச்சிளம் குழந்தைகளைத் தாயிடமிருந்து பிரித்து, அவர்களை ஆபாசப் படங்களுக்குப் பயன்படுத்திய 29 வயது நபரின் கொடூரச் செயல் அம்பலமானது. 

‘ஒப் பெடோ’ (Op Pedo) என்ற சிறப்பு நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட அந்த நபரின் கைப்பேசியில் இருந்து நூற்றுக்கணக்கான ஆபாசப் படங்கள், காணொலிகள் கைப்பற்றப்பட்டன.

பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஒரு பகுதியினர் ஏற்கனவே சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்கள் இதுபோன்ற சம்பவங்களால் அடையும் மன உளைச்சலைக் குறைக்கவும், பாதுகாப்பான சூழலில் அவர்களிடம் வாக்குமூலம் பெறவும் மூவார் உள்ளிட்ட மூன்று இடங்களில் 'சிறுவர் நேர்காணல் மையங்கள்' (CIC) அமைக்கப்பட்டுள்ளதாகக் கைரின் நிசா தெரிவித்தார். 

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படுவதோடு, ஜொகூர் மாநிலம் முழுவதும் அவர்களின் நலனை உறுதி செய்ய அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset