நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்துயிர் பெற்ற கோலாலம்பூரின் வரலாற்று அடையாளம்: சிலாங்கூர் சுல்தான் பாராட்டு

கோலாலம்பூர்: 

சிலாங்கூர் சுல்தான் சுல்தான் சராஃபுதீன் இட்ரிஸ் ஷா, கசானா நேஷனல் மேற்கொண்டு வரும், குறிப்பிடத்தக்க வரலாற்று மதிப்புமிக்க சுல்தான் அப்துல் சமாட் கட்டிடத்தின் மறுசீரமைப்பு, பாதுகாப்பு முயற்சிகளில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தக் கட்டிடம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தேசிய பாரம்பரியம் என்று விவரித்த அவர், 2018, 2019 ஆம் ஆண்டுகளில் தலைநகரில் உள்ள பல சிலாங்கூர் வரலாற்றுக் கட்டிடங்களின் நிலை குறித்து தான் முன்னர் கவலை தெரிவித்ததாகக் கூறினார். 

மறுசீரமைப்புப் பணிகளின் செலவு குறித்த விவாதங்கள், கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படாவிட்டால், மாநிலத்தின் விலைமதிப்பற்ற வரலாற்றுப் பாரம்பரியம் இழந்துவிடும் என்று தான் அஞ்சுவதாக சுல்தான் சராஃபுதீன் தெரிவித்தார்.

"இறுதியில், எதிர்கால சந்ததியினர் பாராட்டுவதற்குக் கோலாலம்பூரில் சிலாங்கூரின் பாரம்பரியத்திற்கான எந்த ஆதாரமும் இருக்காது என்று நான் அஞ்சுகிறேன்" என்று இன்று அந்த ஆட்சியாளர் கூறினார்.

1894 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டிடம், ஒரு காலத்தில் புதிய சிலாங்கூர் மாநில அரசு அலுவலகமாகவும், 1896 ஆம் ஆண்டு கோலாலம்பூர் கூட்டமைப்பு மலாய் மாநிலங்களின் நிர்வாக மையமாக அறிவிக்கப்பட்டபோது, கூட்டரசு நிர்வாகத் தலைமையகமாகவும் பணியாற்றியதால், அது பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று சுல்தான் சராஃபுதீன் குறிப்பிட்டார்.

இந்தக் கட்டிடம் இரண்டு ஆண்டுகள் ஏழு மாதங்களுக்குள் நிறைவடைந்து, ஏப்ரல் 3, 1897 அன்று, சிலாங்கூரின் நான்காவது சுல்தானும், தனது மூதாதையருமான சுல்தான் சர் அப்துல் சமாட் ஆட்சிக் காலத்தில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டதாக சுல்தான் சராஃபுதீன் கூறினார்.

"77 ஆண்டுகளாக, இந்தக் கட்டிடம் சிலாங்கூர் mமாநிலம், கூட்டரசு செயலகம் என அறியப்பட்டது. அது அந்த நேரத்தில் நாட்டின் நிர்வாகத்தில் அதன் முக்கியமான இரட்டைப் பங்கைப் பிரதிபலித்தது" என்று அவர் தெரிவித்தார்.

கோலாலம்பூர் பிப்ரவரி 1, 1974 அன்று, தனது தந்தை, மறைந்த சுல்தான் சலாஹுதீன் அப்துல் அஜிஸ் ஷா அல்ஹாஜின் ஒப்புதலுடன், ஒரு கூட்டரசுப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதையும், சிலாங்கூரின் தலைநகரம் ஷா ஆலமிற்கு மாற்றப்பட்டதையும் தொடர்ந்து, இந்தக் கட்டிடம் கூட்டரசு அரசின் கீழ் வந்து, சுல்தான் அப்துல் சமாட் கட்டிடம் என மறுபெயரிடப்பட்டது என்று சுல்தான் சராஃபுதீன் கூறினார்.

"உண்மையில், அந்த நேரத்தில் கோலாலம்பூரைக் கூட்டரசு அரசிடம் ஒப்படைப்பது, மலேசியாவின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்குமான என் தந்தையின் மிகப்பெரிய தியாகமாகும். மேலும், இந்தக் கட்டிடம் அதற்கு ஒரு சாட்சியாக நிற்கிறது" என்று அந்த ஆட்சியாளர் மேலும் குறிப்பிட்டார்.

அப்போதைய சிலாங்கூர் மந்திரி பெசார் மறைந்த டத்தோஸ்ரீ ஹருன் இட்ரிஸின் நிர்வாகத்தின் கீழ், 1968 ஆம் ஆண்டு தான் அங்கு பணியாற்றியதால், இந்தக் கட்டிடம் தனக்கு தனிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், பழைய சார்ட்டர்டு வங்கிக் கட்டிடத்தில் உள்ள கோலாலம்பூர் நில அலுவலகத்திற்கு தனது பணி மாற்றத்திற்கு முன், அங்கு பணியாற்றியதாகவும் சுல்தான் கூறினார்.

இந்தக் கட்டிடத்தில்தான் மாநில நிர்வாகத்தின் நுணுக்கங்களைத் தான் கற்றுக்கொண்டதாகவும், ஹருனின் தலைமையைப் பாராட்டுவதாகவும் சுல்தான் சராஃபுதீன் தெரிவித்தார்.

"இந்தக் கட்டிடத்தில் மாநில சட்டமன்ற (கூட்டத்தின்) திறப்பு விழாவை நான் நடத்தி வைத்ததை நான் இன்னும் நினைவில் கொள்கிறேன். இந்த நினைவுகள் அனைத்தும், சிலாங்கூருக்கும் தேசத்திற்குமான சுல்தான் அப்துல் சமாட் கட்டிடத்தின் வரலாற்று மதிப்பு, அடையாளத்திற்கான எனது பற்று, பாராட்டுதலை மேலும் ஆழமாக்குகின்றன" என்று அந்த ஆட்சியாளர் கூறினார்.

ஒரு நுணுக்கமான மறுசீரமைப்புச் செயல்முறையைத் தொடர்ந்து, இந்தக் கட்டிடம் இப்போது ஒரு பொது இடமாக புத்துயிர் பெற்றுள்ளதாகவும், பிப்ரவரி 2 ஆம் தேதி முதன்முறையாகப் பார்வையாளர்களுக்குத் திறக்கப்பட்டதாகவும், இது ஒரு வரலாற்று பெருமைக்குரிய விஷயம் என்றும் அவர் தெரிவித்தார்.

சுல்தான் அப்துல் சமாட் கட்டிடத்திற்கு மட்டுமல்லாமல், சிலாங்கூரின் வரலாற்றுடன் இணைக்கப்பட்ட கோலாலம்பூரில் உள்ள மற்ற பாரம்பரிய தளங்களுக்கும் இத்தகைய பாதுகாப்பு முயற்சிகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையை சுல்தான் வெளிப்படுத்தினார்.

"வரலாற்றுப் பாரம்பரியம் என்பது கடந்த காலத்தின் ஒரு எச்சம் மட்டுமல்ல, மாறாக எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தேசிய அடையாளத்தின் அடித்தளமாகும்.

"சுல்தான் அப்துல் சமாட் கட்டிடம், வரலாறு, பாரம்பரியம், தேசிய பெருமையின் அடையாளமாகத் தொடர்ந்து உயர்ந்து நிற்கட்டும்" என்று சுல்தான் சராஃபுதீன் கூறினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset