நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்கான் மலேசியாவில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: விமரிசையாக நடைபெறவுள்ளது

கோலாலம்பூர்:

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) மலேசியா, ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணர் பிரதிஷ்டை விழாவை ஸ்ரீ ஜகந்நாத மந்திர் கோலாலம்பூர் கோவிலில் 18 முதல் 20 ஏப்ரல் 2026 வரை கொண்டாடவுள்ளது. 

இந்த விழா, அக்‌ஷய திருதியை என்னும் மங்களகரமான நாளில் நிகழவிருக்கிறது.

இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதரால் நிறுவப்பட்ட இந்த இயக்கம், பக்தி யோகம்,  வேத ஞானத்தின் போதனைகளை உலகளவில் பகிர்வதிலும், பக்தி சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களையும் ஆன்மீக சமூகங்களையும் நிறுவுவதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளது.

விக்ரஹ பிரதிஷ்டை என்று அழைக்கப்படும் இந்த புனிதமான விழா, கோவிலுக்கும் பரந்த சமூகத்திற்கும் ஒரு முக்கியமான ஆன்மீக இலக்கைக் குறிக்கிறது. 

இது ஒரு பாரம்பரிய வேத சடங்காகும். இதில் பகவான் விக்ரஹ வடிவில் வெளிப்பட அழைக்கப்பட்டு, வழிபாடு, தியானம், பக்தி சேவைக்காக கோவிலுக்குள் ஒரு தெய்வீக இருப்பை நிலைநாட்டுகிறார்.

இந்தியாவின் ஜெய்ப்பூரில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் பளிங்குத் திருவுருவங்கள், தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடைய செழுமையான பக்தி, கலாச்சார மரபுகளைப் பிரதிபலிக்கும் வகையில், பிரதிஷ்டை செய்யப்படுகின்றனர்.

இந்த விக்ரஹ பிரதிஷ்டை என்பது வெறும் விழா மட்டுமல்ல, இது வரும் தலைமுறைகளுக்குப் பயனளிக்கும் ஓர் அர்த்தமுள்ள முக்கியக்கட்டம் என்றும், தனிநபர்களும் குடும்பங்களும் அமைதி, தியானம் மற்றும் ஆன்மீகத் தொடர்புக்காக நாடக்கூடிய ஒரு புனிதமான ஸ்தலத்தை இது உருவாக்கும் என்று கோலாலம்பூர் ஸ்ரீ ஜகந்நாத மந்திர் கோயிலின் இணைத் தலைவரான ஶ்ரீமன் கிருபா சிந்து கிருஷ்ண தாஸ் கூறினார்.
 
இந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் பாரம்பரிய வேத சடங்குகள், பக்தி விழாக்கள், பிரசாதம் விநியோகம் ஆகியவை இடம்பெற்று, வருகையாளர்களுக்கு ஓர் அர்த்தமுள்ள கலாச்சார மற்றும் ஆன்மீக அனுபவத்தை வழங்கும்.

இந்த திருவிழா, நிலையான எண்ணற்ற பலன்களைத் தரக்கூடிய அக்‌ஷய திருதியை நாளில் நடைபெறவுள்ளது. 

இதனையொட்டி, போகா, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளின் மூலம் பொதுமக்களும் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.

கோலாலம்பூர் ஸ்ரீ ஜகந்நாத மந்திர், ஆன்மீக நல்வாழ்வையும் சமூக நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் நோக்குடன், உணவு விநியோகத் திட்டங்கள், கலாச்சாரப் பரப்புரை, கல்விச் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மூலம் 1985 முதல் சமூகத்திற்குச் சேவை செய்து வருகிறது.

பொதுமக்கள் விக்ரஹ பிரதிஷ்டை விழாவில் கலந்துகொண்டு இந்த அர்த்தமுள்ள நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

மேல் விவரங்களுக்கு www.iskconkl.com.my  எனும் அகப்பக்கத்தை மக்கள் வலம் வரலாம்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset