நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிள்ளான் தொழிற்சாலையில் அதிரடி சோதனை: போலி அடையாள அட்டையுடன் சிக்கிய 46 வெளிநாட்டினர்

கிள்ளான்:

புக்கிட் ராஜா பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தேசியப் பதிவுத் துறை (JPN) மேற்கொண்ட 'ஓப்ஸ் ரோடா' (Ops Roda) எனும் அதிரடிச் சோதனையில், போலி அடையாள அட்டைகள், பிறருக்குச் சொந்தமான ஆவணங்களைப் பயன்படுத்தி வேலை செய்த 46 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். 

கைதானவர்களில் 25 பெண்களும், 21 ஆண்களும் அடங்குவர். 20 முதல் 45 வயதுடைய இவர்கள் அனைவரும் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சுமார் ஒரு மாத கால ரகசியக் கண்காணிப்பிற்குப் பிறகு, குடிவரவுத் துறை, தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்தச் சோதனையின் போது, அதிகாரிகளிடமிருந்து தப்பிப்பதற்காகச் சில தொழிலாளர்கள் அங்கிருந்த பெட்டிகளுக்குள் ஒளிந்து கொண்ட போதிலும், அவர்கள் அனைவரும் சாமர்த்தியமாகப் பிடிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு முறையற்ற வகையில் போலி ஆவணங்களை விநியோகித்த ஏஜெண்டுகள், இதற்குப் பின்னணியில் செயல்படும் கடத்தல் கும்பல்களைக் கண்டறியும் பணிகளில் அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

மொத்தம் 136 நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், இந்த 46 பேர் சட்டவிரோத ஆவணங்களைப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் மீது 1990-ஆம் ஆண்டு தேசியப் பதிவுச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் போலி ஆவணங்கள் மூலம் பணியில் அமர்த்தும் இத்தகையச் சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கத் தொடர்ந்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜே.பி.என் (JPN) அமலாக்கப் பிரிவு இயக்குநர் மஸ்ஹத் அப்துல் அஜீஸ் எச்சரித்துள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset