நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய பேரிடர் மேலாண்மை சபை நிறுவப்பட்டது

புத்ராஜெயா: 

எந்தவொரு பேரிடரையும் எதிர்கொள்வதில், கூட்டரசு அரசாங்கத்திற்கும் மாநில அரசுகளுக்கும் இடையே மிகவும் விரிவான ஒருங்கிணைப்புத் தளமாக செயல்படும் வகையில், தேசிய பேரிடர் மேலாண்மை சபையை நிறுவ அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

மடானி  அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளருமான தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்ஸில், மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான பேரிடர் மேலாண்மை ஆளுகையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஆராய்ந்த பின்னர், இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

"இன்றைய அமைச்சரவைக் கூட்டம், தேசிய பேரிடர் மேலாண்மை சபையின் நிறுவலை ஆராய்ந்து முடிவு செய்தது.

"இந்தச் சபையில், அனைத்து மந்திரி பெசார்கள், முதலமைச்சர்கள், சரவாக் பிரீமியர் ஆகியோர் நிரந்தர உறுப்பினர்களாக இருப்பார்கள். மேலும், அவ்வப்போது நடைபெறும் மந்திரி பெசார், முதலமைச்சர்களின் கூட்டத்திற்குப் பின்னர் உடனடியாக இந்தச் சபை கூட்டப்படும்" என்று அவர் கூறினார்.

பேரிடர் மேலாண்மை தொடர்பான கொள்கைகள், நடவடிக்கைகளை செயல்படுத்துவதை ஒருங்கிணைக்கும் பொருட்டு, தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) அந்தச் சபையின் செயலகமாகச் செயல்படும் என்பது தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வெள்ளம், இயற்கைப் பேரிடர்கள், எதிர்பாராத நெருக்கடிகள் உள்ளிட்ட பேரிடர் அபாயங்களை எதிர்கொள்வதில், நாட்டின் தயார்நிலையை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் செயலூக்கமான இந்த நிறுவல் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset