நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கலப்பு பாலின வீட்டு வாடகைப் போக்கு இஸ்லாமிய சட்ட எல்லைகளை மீறுகிறது: முஃப்தி விலாயா எச்சரிக்கை

ஷா ஆலம்: 

குறிப்பாக மாணவர்கள், நகர்ப்புற தொழிலாளர்களிடையே காணப்படும் கலப்பு பாலின வீட்டு வாடகைப் போக்கு, ஷரியா கொள்கைகளுக்கு முரணானது, தவறான வழிகாட்டுதலுக்கு இடமளிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. இது விபரிதத்திலும் அனாச்சாரத்திலும் கொண்டுவிடும் என்று கூட்டரசுப் பிரதேச முஃப்தி அஹ்மத் ஃபௌவாஸ் ஃபட்ஸில் கூறினார்.

பணியிட அருகில், அதிக வாடகைச் செலவு போன்ற காரணங்கள், இஸ்லாத்தில் உள்ள  சமூக தொடர்புகளின் எல்லைகளை மீறக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

"கல்வி, தொழில் நோக்கங்களுக்காக இளைஞர்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வதன் யதார்த்தம், தங்குமிடக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வைக்கிறது.

இருப்பினும், முன்பின் தெரியாத ஆண்களும் பெண்களும் முறையில்லாமல் ஒரு வீட்டைப் பகிர்ந்து கொள்வதற்கு இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கவில்லை.

"தடையற்ற கலவையான சமூகத் தொடர்பைப் பற்றிய அலட்சிய அணுகுமுறை கட்டுப்படுத்தப்பட வேண்டும், ஏனெனில் அது இஸ்லாமியக் கொள்கைகளுக்கு முரணானது. மேலும், இது தவறான வழிகாட்டுதலுக்கு வழிவகுக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.

எனவே, வீட்டு உரிமையாளர்களுக்கும் குத்தகைதாரர்களுக்கும் முஃப்தி அஹ்மத் ஃபௌவாஸ் சில வழிகாட்டுதல்களை வகுத்துள்ளார்.

வாடகை பரிவர்த்தனைகள் மிகவும் நெறிமுறையானதாகவும், மார்க்கப் போதனைகளுக்கும் தேவைகளுக்கும் இணக்கமானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

"வீட்டு உரிமையாளர்கள், திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே வீட்டில் வசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை தெளிவான நிபந்தனையாக நிர்ணயிக்க வேண்டும்.

அவ்வப்போது வீட்டின் நிலைமையைக் கண்காணிக்க வேண்டும், மேலும் வாடகை விளம்பரங்கள் ஒவ்வொரு அறைக்கும் பாலினக் கட்டுப்பாட்டைக் குறிப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும்.

"குத்தகைதாரர்கள், வாடகைக் காலம் முழுவதும் ஒழுக்கத்தைப் பேணுதல், சமூக தொடர்புகளின் எல்லைகளைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட நிர்ணயிக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றுவதற்குப் பொறுப்பானவர்கள். அவர்கள் எதிர் பாலின நண்பர்களைச் சுதந்திரமாக அழைத்து வரக்கூடாது. தங்களோடு ஒருபோதும் தங்க அனுமதிக்கக் கூடாது.

"குத்தகைதாரர்கள் ஒழுக்கத்தையும், ஆடை அணியும் முறையையும் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், மத, கலாச்சார நெறிமுறைகளை மதிக்க வேண்டும். அதே நேரத்தில், வீட்டின் பாதுகாப்பும் நல்லிணக்கமும் எப்போதும் பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார்.

சமூக தொடர்பு, இடப் பயன்பாடு, குடியிருப்பாளர்களின் ஒழுக்கம் தொடர்பான நிபந்தனைகளை உள்ளடக்கிய எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் வழங்குமாறும், அது ஷரியா சட்டத்திற்கும் தற்போதைய சட்டங்களுக்கும் முரணாக இல்லை என்பதை உறுதி செய்யுமாறும் அவர் பரிந்துரைத்தார்.

"இந்த வாடகை நெறிமுறைகள், குறிப்பாக மதம், சந்ததியைப் பேணுவதில், மகாசித் ஷரியாவின் வெளிப்பாடாகும். இது, தவறான செயல்களில் விழுவதிலிருந்து சமூகத்தின் நலனுக்காக உள்ளது.

"இது சமூக வழிகாட்டுதல்கள் மட்டுமல்ல, நம் பிள்ளைகளின் மதிப்பைப் பாதுகாக்கும், பாதுகாப்பானதும், இஸ்லாமியச் சட்டத்தின் முழுமைக்கு இணக்கமானதுமான ஒரு மதிப்பாகும்" என்று அவர் விளக்கினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset