நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புற்றுநோய் தடுப்பில் அடுத்த கட்டம்: நோயாளிகளின் தரவுகளைத் திரட்டத் தெலுங்கானா அரசு முடிவு

ஐதராபாத்: 

தெலுங்கானா மாநில அரசு, புற்றுநோயை 'அறிவிக்கப்பட வேண்டிய நோயாக' (Notifiable Disease) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள், நோயறிதல் மையங்கள், ஆய்வகங்கள், தங்களிடம் சிகிச்சை பெற வரும் புற்றுநோயாளிகளின் விவரங்களை அரசுக்குத் தெரிவிப்பது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கையைத் துல்லியமாகக் கண்காணித்து, உரியச் சிகிச்சைகளை வழங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயாளிகளைக் கண்காணிப்பதற்காகவே பிரத்யேகமாக ஒரு புதிய இணையதளத்தை (Portal) மாநில அரசு தொடங்கியுள்ளது. இந்த இணையதளத்தில் பதிவாகும் தரவுகள் மூலம், புற்றுநோய் எந்தப் பகுதிகளில் அதிகமாகப் பரவுகிறது, எந்த வகையான புற்றுநோயால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் போன்ற விவரங்களைச் சுகாதாரத் துறை அதிகாரிகள் பகுப்பாய்வு செய்வார்கள். இது நோயைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து உயிரிழப்புகளைத் தடுக்கப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புற்றுநோய்க்கு எதிரானப் போராட்டத்தில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் இத்திட்டத்தின் மூலம், மாநிலம் தழுவிய அளவில் ஒரு விரிவான தரவுத்தளம் உருவாக்கப்படும். 

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருந்து விநியோகம், கதிரியக்கச் சிகிச்சை (Radiation therapy), நிதி உதவிகளை முறையாகத் திட்டமிட இந்தத் தரவுகள் அரசுக்குப் பயன்படும். நோயாளிகளின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் அரசு உறுதியளித்துள்ளது.

இந்த புதிய உத்தரவின்படி, புற்றுநோய் குறித்த விவரங்களை முறையாகப் பதிவு செய்யத் தவறும் மருத்துவ நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்டுள்ள இந்த முறையானது, புற்றுநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset