நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2027 வரை மலேசியா சுற்றுலா ஆண்டு நீடிக்கும்: துணைப் பிரதமர் ஜாஹித்

புத்ராஜெயா: 

மலேசிய வருகை ஆண்டு 2026 (வி.எம்.2026) செயல்படுத்தப்படும் காலம் 2027 இறுதி வரை நீட்டிக்கப்படும்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, இன்று நடைபெற்ற இரண்டாவது வி.எம்.2026 தேசிய முதன்மைக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார்.

இந்த நீட்டிப்பு முடிவு, மேலதிக பரிசீலனை, ஒப்புதலுக்காக அமைச்சரவைக் கூட்டத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்றார் அவர்.

"இந்த முடிவு, மலேசியா ஒரு செயலூக்கமான அணுகுமுறையை எடுப்பதை சாத்தியமாக்குவதற்காக எடுக்கப்பட்டது. இது ஊக்குவிப்பு உத்திகளை வலுப்படுத்துவதற்கும், நாட்டை பாதுகாப்பான, நிலையான, போட்டித்தன்மை வாய்ந்த இடமாக முன்னிலைப்படுத்துவதற்கும், சுற்றுலாப் பயணிகளின் பயண முறைகளில் ஏற்படும் மாற்றங்களிலிருந்து வாய்ப்புகளை உண்டாக்குவதும் ஆகும்" என்று அவர் கூறினார்.

வி.எம்.2026 தேசிய முதன்மைக் குழுவின் தலைவருமான அஹ்ம்மத் ஜாஹித், கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி மேற்கு ஆசியாவில் வெடித்த யுத்த மோதல் உட்பட தற்போதைய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினார்.

இந்த மோதல் பிராந்திய நிலைத்தன்மையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் குழு, சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சு, தகவல் தொடர்பு அமைச்சு, வீட்டுவசதி, உள்ளூராட்சி அமைச்சு, போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றால் வழிநடத்தப்படும் ஆறு செயல்பாட்டுக் குழுக்களைக் கொண்டுள்ளது. தொடர்புடைய பல்வேறு அரசு நிறுவனங்களின் உறுப்பினர்களையும் இது கொண்டுள்ளது.

மேற்கு ஆசியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை 11 சதவீதம் முதல் 27 சதவீதம் வரை குறையக்கூடும், அல்லது 38 மில்லியன் பார்வையாளர்கள் வரை இழக்கப்படலாம் என்றும், இது AS$56 பில்லியன் வரையிலான இழப்பை உள்ளடக்கியதாகவும் செய்யப்பட்ட மதிப்பீடுகள் காட்டுவதாக அவர் கூறினார்.

"இது ஆசியா, ஆசியானில் உள்ள சுற்றுலா மைய நாடுகளைப் பாதிக்கிறது.

"இந்த வளைகுடா மோதல் சர்வதேச விமானப் பாதைகளையும் சீர்குலைக்கிறது. எண்ணெய் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவுகள் காரணமாக பயணச் செலவுகளையும் இது அதிகரிக்கிறது.

"இந்த நிலைமை சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையையும் குறைக்கிறது, இது எதிர்வரும் காலத்தில் உலக சுற்றுலா ஓட்டத்திற்கு தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று அவர் கூறினார்.

எனவே, புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற அந்தக் கூட்டம், இந்த விஷயங்களைப் பற்றி விவாதித்து ஆய்வு செய்ததாக அஹ்ம்மத் ஜாஹித் தெரிவித்தார்.

அதே நேரத்தில், ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும், வி.எம்.2026 பிரச்சாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கும் அந்தக் கூட்டம் நடைபெற்றதாக அவர் கூறினார்.

"இந்த முயற்சி, மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும், அதிகமான பார்வையாளர்களை ஈர்ப்பதையும், சுற்றுலாப் பயணிகளின் செலவினங்களையும் அதிகரிப்பதையும், மலேசியாவை பாதுகாப்பான, நிலையான, போட்டித்தன்மை வாய்ந்த இடமாக முன்னிலைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset