நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செகாமட் விபத்து: 3 பேரைக் கொன்ற லாரி ஓட்டுநர் மீது கொலை வழக்கு

செகாமட்: 

கடந்த வியாழக்கிழமை ஒரு குடும்பத்தில் மூன்று பேர் உயிரிழப்புக்குக் காரணமான விபத்தில் ஈடுபட்ட, போதைப்பொருள் உட்கொண்ட டிரெய்லர் ஓட்டுநர், இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மூன்று கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.

29 வயதுடைய முஹம்மத் ஷாபிக் சாலே, மூன்று குற்றச்சாட்டுகளும் மாஜிஸ்திரேட் அமலினா ஜோஹர் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டபோது, அவற்றைப் புரிந்துகொண்டதாகத் தலையசைத்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டது என்பதால், எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றச்சாட்டுகளின்படி, கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி மாலை 3.50 மணியளவில், ஜொகூர் பாரு-சிரம்பான் சாலையின் 212-வது கிலோமீட்டரில் நிகழ்ந்த சம்பவத்தில், எஸ். பாலையாண்டி (வயது 77), கே. மாயாகிருஷ்ணன் (வயது 72), எஸ். செவெந்தை (வயது 62) ஆகியோரைக் கொலை செய்ததாக அவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் இந்தக் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது குறைந்தபட்சம் 30 ஆண்டுகள், அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை, மேலும் தூக்கிலிடப்படாவிட்டால் 12 முறைக்கு மிகாமல் பிரம்படி தண்டனை விதிக்கப்படலாம்.

துணை வழக்குத் தொடரும் அதிகாரி நூர் 'ஐனா முஹம்மத் இஸ்மாயில் தாஜ் தலைமையில் வழக்குத் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர் வழக்கறிஞர் எவராலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை.

இதற்கு முன்னர், பிரேத பரிசோதனை அறிக்கை, மருத்துவ அறிக்கை, புஸ்பாக்கோம் அறிக்கை, தடய அறிக்கை, நோயியல் அறிக்கை ஆகியவற்றை இன்னும் பெறாததால், புதிய தேதியைக் கோரி வழக்குத் தொடர்பு தரப்பு மனு செய்தது.

வழக்குத் தொடர்பு தரப்பின் மனுவை நீதிமன்றம் அனுமதித்தது, மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எந்தவொரு ஜாமீனும் வழங்கப்படவில்லை. இந்த வழக்கின் மறு விசாரணை இந்த மே 21 ஆம் தேதி நடைபெறும்.

கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த சம்பவத்தில், இங்குள்ள கெமாஸ் பாரு, தாமான் கோல்டன் ஹில் சந்திப்புக்கு அருகில், மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

இங்குள்ள பத்து அனாமில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்பிய போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset