நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மௌனம் என்பது அநீதிக்குத் துணை போவதே: ஈரான் தூதரகத்தின் அதிரடி அறிக்கை

கோலாலம்பூர்: 

மேற்காசியாவில் நிலவும் மோதலைத் தொடர்ந்து சர்வதேச சமூகம் தொடர்ந்து அமைதியாக இருக்கக் கூடாது என்று மலேசியாவுக்கான ஈரான் தூதர் வலியுல்லா மொஹம்மதி நஸ்ராபாதி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏனெனில், அத்தகைய செயல், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது நடத்தும் போர்க் குற்றங்களை உலகம் 'அங்கீகரிப்பது' போன்ற ஒரு தோற்றத்தை அளிக்கிறது என்றார் அவர்.

அதே நேரத்தில், ஈரானின் பல்வேறு வசதிகள் அழிக்கப்படுதல், பொதுமக்கள் இலக்காக்கப்படுதல், உலகம் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மற்ற நாடுகளுக்கும் நிகழலாம் என்ற தனது கவலையையும் அவர் வெளிப்படுத்தினார்.

"இத்தகைய செயல்கள் விசாரணை, பொறுப்புக்கூறல் இல்லாமல் தொடர அனுமதிக்கப்பட்டால், எந்த நாட்டின் இறையாண்மையும் பொதுமக்களின் பாதுகாப்பும் இனி உறுதி செய்யப்படாது.

"பொதுமக்கள், முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள், மனிதாபிமானக் கொள்கைகளை மீறினால், போர்க் குற்றங்களாகக் கருதப்படலாம் என சர்வதேச சட்டமே வலியுறுத்துகிறது.

"ஒரு நாட்டிற்கு எதிராக இத்தகைய குற்றங்கள் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாமல் செய்யப்பட முடிந்தால், அவை மற்றொரு நாட்டிற்கு எதிராக மீண்டும் நிகழ்வது சாத்தியமில்லாமல் போகாது. எனவே, நீதி நிலைநாட்டப்படுவதற்கும், உலகளாவிய பாதுகாப்பு தொடர்ந்து வலுப்படுவதற்கும், ஈடுபட்டுள்ள தரப்பினர் பொறுப்புக்கூற வேண்டும்" என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தங்கள் நாட்டைப் பாதுகாப்பதில் ஈரான் மக்கள் உறுதியாக இருப்பார்கள் என்றாலும், தற்போதைய தாக்குதல்கள் அந்த இஸ்லாமிய குடியரசின் மீது மட்டும் இலக்காகவில்லை, மாறாக அது முழுப் பிராந்தியத்திற்குமான அச்சுறுத்தல் என்பதை உலகம் உணர வேண்டும் என்று வலியுல்லா கூறினார்.

"ஒரு தலைவர் வெளிப்படையாக ஒரு நாட்டை 'கற்காலத்திற்குத் திருப்பி அனுப்ப' விருப்பம் இருப்பதாகக் கூறும்போது, அது அவரது உண்மையான நோக்கத்தைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

"இத்தகைய அறிக்கைகள், கற்பனை செய்து பார்க்க முடியாத அளவில் பொதுமக்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்துவதற்கான தயார்நிலையைச் சமிக்ஞை செய்கின்றன.

"இவை எளிதாகக் கருதப்படக்கூடிய பேச்சுகள் அல்ல, மாறாக அவை ஒரு எச்சரிக்கையாகும்" என்று அவர் கூறினார்.

மேலும், சர்வதேச சமூகம் இத்தகைய அச்சுறுத்தல்களைப் புறக்கணிக்கக்கூடாது. மாறாக, அமைதியாக இருப்பதன் மூலம், நடந்து கொண்டிருக்கும் அநீதிகளில் உலகமும் சம்மந்தப்பட்டதாகவும், அவற்றை ஏற்றுக்கொள்வதாகவும் ஆகும் என்று  அவர் தெரிவித்தார்.

ஈரானில் நடைபெற்று வரும் போர் நிலைமையின் சூழலில், சட்டங்களும் மனிதாபிமான நெறிமுறைகளும் தொடர்ந்து நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்காக, சர்வதேச சமூகம் துணிச்சலான, கொள்கை சார்ந்த நிலைப்பாட்டை எடுப்பது மிகவும் அவசியம் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், ஈரானுக்கு உறுதியான ஆதரவைத் தொடர்ந்து காட்டி வரும் மலேசியாவையும் வலியுல்லா பாராட்டினார்.

"இந்தச் சூழலில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிமின் துணிச்சலான, கொள்கை சார்ந்த நிலைப்பாடு, மலேசியா வரலாற்றில் சரியான பக்கத்தில் இருப்பதைத் தேர்ந்தெடுத்துள்ளது என்பதற்கான தெளிவான சமிக்ஞையாகும். இது சர்வதேச அளவில் அதன் இராஜதந்திர நிலையை வலுப்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளது.

"இந்த புத்திசாலித்தனமான முடிவை வரலாறு நியாயமாக மதிப்பிடும். அதே நேரத்தில், இந்த கடினமான சவாலை எதிர்கொள்ளும் போது, மலேசிய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இருக்கும் உறுதியான ஆதரவை ஈரான் மக்கள் மறக்க மாட்டார்கள்" என்று அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset