செய்திகள் இந்தியா
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவின் மனைவிக்கு 3 பாஸ்போர்ட்டுகள்: காங்கிரஸ் ஆதாரங்களை வெளியிட்டது
கவ்ஹாட்டி:
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவின் மனைவிக்கு துபையில் சொத்துகள் இருப்பதாகவும் அவர் மூன்று நாடுகளின் கடவுச் சீட்டுகளை (பாஸ்போர்ட்) வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
அஸ்ஸாமில் வரும் 9-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கட்சிகளின் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஊடக, விளம்பரப் பிரிவின் தலைவர் பவன் கேரா, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஹிமந்த விஸ்வ சர்மாவின் மனைவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக சில ஆவணங்களையும் அவர் வெளியிட்டார்.
செய்தியாளர் சந்திப்பில் பவன் கேரா கூறியதாவது:
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவும் அவரது மனைவி ரினிகி பூயான் சர்மாவும் பல ஆண்டுகளாக நில அபகரிப்பு, கோயில் காணிக்கைகளில் முறைகேடு செய்தல், அரசு மானியத்தில் ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
தற்போது உங்கள் முன் நாங்கள் வெளியிட்டுள்ள ஆவணங்கள் இந்தியாவின் எல்லைகளைக் கடந்து வெளிநாடுகளில் உள்ள விஷயங்கள் சம்பந்தப்பட்டவை ஆகும்.
ஹிமந்த விஸ்வ சர்மாவின் மனைவி ரினிகி சர்மா மூன்று கடவுச்சீட்டுகளை வைத்துள்ளார். அவற்றில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரக நாட்டின் கடவுச்சீட்டு கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி அளிக்கப்பட்டது. அது வரும் 2031-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி காலாவதியாக உள்ளது. ரினிகி சர்மா வசம் ஆன்டிகுவா மற்றும் பார்படோஸ் நாட்டின் கடவுச்சீட்டும், எகிப்து நாட்டின் கடவுச்சீட்டும் உள்ளன.
ஹிமந்த விஸ்வ சர்மாவின் ஒட்டுமொத்த அரசியலும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. எனினும் அவரது மனைவி இரண்டு முஸ்லிம் நாடுகளிடம் இருந்து கடவுச்சீட்டுகளைப் பெற்றுள்ளார். தேர்தலில் தோற்கும்பட்சத்தில் நம் நாட்டை விட்டுத் தப்பி ஓடுவதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்து வருகிறார்களா?
ரினிகி சர்மா, துபையில் இரண்டு சொத்துகளை வைத்துள்ளார். பலரும் வெளிநாடுகளில் சொத்து வைத்துள்ளனர். ஆனால் ஒருவர் தேர்தலில் போட்டியிடும்போது தனது கணவர் அல்லது மனைவியின் சொத்துகள் குறித்த விவரத்தை தனது வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும். ஆனால் ஹிமந்த விஸ்வ சர்மாவின் வேட்பு மனுவில் தனது மனைவிக்கு சொந்தமாக துபையில் இருக்கும் இரண்டு சொத்துகள் குறித்த விவரம் குறிப்பிடப்படவில்லை. தன் மனைவியின் சொத்துகள் குறித்த விவரத்தை அவர் குறிப்பிடத் தவறியது ஏன்?
இது தவிர ரினிகி சர்மா, அமெரிக்காவின் வையோமிங் பகுதியில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கான பெயர்ப் பட்டியலில் ஹிமந்த விஸ்வ சர்மா தம்பதியின் பெயர்கள் மட்டுமின்றி அவர்களது மகன் பெயரும் இடம்பெற்றுள்ளது.
போலி நிறுவனங்களை கணக்கு காட்டுவதன் மூலம் ஹிமந்த விஸ்வ சர்மா தனது பணத்தை வையோமிங்கில் குவித்து வைத்துள்ளார். இந்த விவகாரங்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்படுமா என்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்க வேண்டும்.
ஹிமந்த விஸ்வ சர்மாவின் வேட்பு மனுவில் தகவல்கள் மறைக்கப்பட்ட விவகாரத்தை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் எப்போது கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பார்? தனது குற்றங்களுக்காக ஹிமந்த விஸ்வ சர்மா சிறைக்கு வெளியே ஒருநாள்கூட இருக்கக் கூடாது. அவரது வேட்பு மனு ரத்து செய்யப்பட வேண்டும் என்று பவன் கேரா கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
