நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு பணியாளர்களுக்கான வீட்டிலிருந்தே பணி புரிவதற்கான வழிகாட்டுதல்கள் விரைவில் அறிவிக்கப்படும்: டத்தோஶ்ரீ ரமணன்

சுபாங்:

அரசு ஊழியர்கள், அரசாங்கத் தொடர்பு நிறுவன பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை, தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் விரைவில் அறிவிப்பார்.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை தெரிவித்தார்.

இந்தக் கொள்கையை நிலைநிறுத்தும் இறுதிக்கட்டத்தில் அரசாங்கம் உள்ளதாகவும், இது பொதுத்துறை, அரசாங்கத் தொடர்பு நிறுவனங்களை உள்ளடக்கும்.

இதன் அமலாக்கம் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும்.

முதற்கட்டமாக கிள்ளான் பள்ளத்தாக்கு, பினாங்கு, ஜொகூர், கூச்சிங் போன்ற பகுதிகளில் இது நடைமுறைப்படுத்தப்படலாம்.

மே 1, 2026-ஐ நோக்கி: கெசுமா தேசத்தின் தொழிலாளர்கள் எனும் கலந்துரையாடலை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள், வங்கி நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது செயல்பாடுகளில் வீட்டிலிருந்தே பணிபுரியும் முறையை ஏற்றுக்கொண்டிருப்பதை டத்தோஶ்ரீ ரமணன் சுட்டிக்காட்டினார்.

கணினி மூலம் செய்யக்கூடிய பணிகளை அலுவலகத்திலிருந்தோ அல்லது வீட்டிலிருந்தோ செய்ய முடியும் என்பதால், இந்தக் கொள்கையினால் உற்பத்தித்திறன் பாதிக்கப்படாது என்று அவர் கூறினார்.

முன்னதாக வரும் மே 1-ஆம் தேதி புக்கிட் ஜாலில உள்ள யூனிஃபி ஏரியானாவில் நடைபெறவுள்ள தேசிய தொழிலாளர் தினக் கொண்டாட்டத்திற்கான ஒரு முன்னோட்டமாகவும் இது அமைகிறது.

தொழிலாளர்களின் உண்மையான தேவைகளை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும், அரசாங்கக் கொள்கைகளை வகுப்பதில் அவர்களின் குரல் பிரதிபலிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் இந்தத் திட்டம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, மே 1 முதல் 3 வரை புக்கிட் ஜாலில் உள்ள தேசிய அரங்கத்தின் வாகன நிறுத்துமிடம் B-இல் மெகா வேலைவாய்ப்பு மற்றும் திறன் திருவிழா மற்றும் மனிதவள அமைச்சின் சேவைச் சாவடி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவை தவிர, மார்ச் 30 முதல் ஏப்ரல் 13 வரை தொழிலாளர் தினக் கவிதைப் போட்டி, மே 7 அன்று சபாவில் இஸ்லாமிய விவகார மன்றம் மற்றும் மே 17 அன்று புத்ராஜெயாவில் 'தொழிலாளர் தின ஓட்டம் - மிதிவண்டிப் பயணம்’ ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset