நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சர்வதேச மாணவர்களை ஈர்க்கும் யூ.எம்.டி பல்கலைக்கழகம்: 6.5 லட்சம் ரிங்கிட் கல்வி உதவித்தொகை ஒதுக்கீடு

கோலா நெருஸ்:

மலேசிய திரெங்கானு பல்கலைக்கழகம் (UMT), தனது கல்வித் தரத்தை உலகளாவிய ரீதியில் மேம்படுத்தும் நோக்கில் RM6,50,343 ரிங்கிட் நிதியைத் தனது முதுகலை மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையாக ஒதுக்கியுள்ளது. 

'துணைவேந்தர் கல்வி உதவித்தொகை' (Vice Chancellor Scholarship) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த நிதியானது, 60 தகுதியான மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. 

குறிப்பாக, அறிவியல், சமூக அறிவியல் துறைகளில் சர்வதேச மாணவர்களின் வருகையை அதிகரிக்கவும், உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மொத்த நிதியில் RM1.7 லட்சம் ரிங்கிட் ஏற்கனவே மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள சுமார் RM4.7 லட்சம் ரிங்கிட் உயர்தரம் கொண்ட சர்வதேச மாணவர்களுக்குப் படிப்படியாக வழங்கப்படவுள்ளது. 

பல்கலைக்கழகத்தின் நற்பெயரைச் சர்வதேச அளவில் நிலைநிறுத்தவும், சிறந்த கல்விச் சூழலை உருவாக்கவும் இத்தகைய முயற்சிகள் அவசியம் எனப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முஹம்மத் ஜம்ரி இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்த நிதியுதவியைப் பெற்ற மாணவர்கள், தங்களது பொருளாதாரச் சுமையின்றி முழு கவனத்தையும் ஆராய்ச்சியில் செலுத்த முடிவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

மேலும், மாணவர்களின் வசதிக்காகத் தொலைதூரக் கல்வி (Distance Learning), நெகிழ்வுத்தன்மை (Flexible Learning) கொண்ட பாடத்திட்டங்களையும் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

நடப்பு ஆண்டில் சுமார் 1,500 முதுகலை மாணவர்களைத் தனது பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்வதையும், அதன் மூலம் மனிதவள மேம்பாடு, ஆராய்ச்சித் திறனை வலுப்படுத்துவதையும் மலேசிய திரெங்கானு பல்கலைக்கழகம் இலக்காகக் கொண்டுள்ளது.

-கிரித்திக்கா                                                                                                           

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset