நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

வெற்றி ஒருபுறம், நாகரிகம் மறுபுறம்: குப்பைகளை அகற்றி 'சுத்தமே உயர் பண்பு' என நிரூபித்த ஜப்பான் ரசிகர்கள்

லண்டன்: 

இங்கிலாந்தின் புகழ்பெற்ற வெம்பிளி (Wembley) மைதானத்தில் நேற்று நடைபெற்ற நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில், இங்கிலாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஜப்பான் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. 

போட்டி முடிந்ததும் மைதானத்தை விட்டு வெளியேற அவசரப்படாமல், தாங்கள் அமர்ந்திருந்த பகுதிகளில் சிதறிக் கிடந்த குப்பைகளை நீல நிற நெகிழிப் பைகளில் சேகரித்து ஜப்பானிய ரசிகர்கள் சுத்தம் செய்தனர். 

ஜப்பானியர்களின் இந்த நற்செயலைக் கண்டு வியந்த வெம்பிளி மைதான நிர்வாகம், சமூக வலைதளங்களில் அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்ததுடன், "நன்றி" என்றும் பதிவிட்டுள்ளது. "எங்கள் நாட்டிற்கு வந்து, எங்களைத் தோற்கடித்தது மட்டுமின்றி, மைதானத்தையும் சுத்தம் செய்து கொடுத்துவிட்டுச் செல்கிறார்களே! இதுதான் உண்மையான மரியாதை" என இங்கிலாந்து ரசிகர்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜப்பானியர்களின் இத்தகைய தூய்மைப் பணி என்பது இது முதல் முறையல்ல. கடந்த 2018, 2022 உலகக் கோப்பைத் தொடர்களிலும், ஜப்பான் அணி வெற்றி பெற்றபோதும், தோல்வியடைந்த போதும், ரசிகர்கள் மைதானத்தைச் சுத்தம் செய்வதை ஒரு கடமையாகவே செய்து வருகின்றனர். 

ரசிகர்களைப் போலவே ஜப்பான் வீரர்களும் தாங்கள் பயன்படுத்திய உடை மாற்றும் அறையை எவ்விதக் கறையுமின்றித் தூய்மையாக வைத்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

ஹஜிமே மோரியாசு தலைமையிலான ஜப்பான் அணி, கடந்த சனிக்கிழமை ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போதும் இதே போன்ற ஒழுக்கத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. விளையாட்டில் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், தாங்கள் செல்லும் இடமெல்லாம் தங்களது கலாசாரத்தையும், தூய்மையையும் பறைசாற்றும் ஜப்பானியர்களின் இந்தச் செயல், ஏனைய நாட்டு ரசிகர்களுக்கும் ஒரு சிறந்த பாடமாகத் திகழ்கிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset