நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

"நானும் ஒரு முஸ்லிம்தான், அல்ஹம்துலில்லாஹ்": இனவெறிக்கு எதிராகக் குரல் கொடுத்த ஸ்பெயின் வீரர்

பார்சிலோனா: 

ஸ்பெயின், எகிப்து அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியின் போது, ரசிகர்களின் ஒரு பகுதியினர் எழுப்பிய இஸ்லாமிய எதிர்ப்பு முழக்கங்களுக்கு ஸ்பெயின் நாட்டின் இளம் நட்சத்திர வீரர் லமைன் யமால் யமால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்தப் போட்டியின் போது "யார் குதிக்கவில்லையோ அவர் ஒரு முஸ்லிம்" எனப் பொருள்படும் வகையில் மதம் சார்ந்த இழிவுபடுத்தும் முழக்கங்கள் மைதானத்தில் எதிரொலித்தன. இது கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள லமைன் யமால், "நானும் ஒரு முஸ்லிம், இறைவனுக்கே புகழனைத்தும்" என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். 

மைதானத்தில் எழுந்த அந்த முழக்கங்கள் எதிரணிக்கு எதிராகச் சொல்லப்பட்டவை என்றாலும், ஒரு மதத்தை வைத்து கேலி செய்வதும் இழிவுபடுத்துவதும் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அவர் சாடியுள்ளார். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் அறியாமை நிறைந்தவர்கள், இனவெறியாளர்கள் என்றும் அவர் தனது பதிவில் நேரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.

கால்பந்து என்பது ரசிப்பதற்கும் ஊக்கப்படுத்துவதற்குமான ஒரு விளையாட்டு என்றும், ஒருவரது அடையாளம் அல்லது நம்பிக்கையை அவமதிப்பதற்கான இடம் அதுவல்ல என்றும் யமால் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். 

தனது நிலையைத் தெளிவாக விளக்கிய அவர், தமக்கு ஆதரவு அளிக்க வந்த உண்மையான ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், அடுத்ததாக உலகக் கோப்பை போட்டிகளில் சந்திப்போம் என்றும் பதிவிட்டுள்ளார். 18 வயதேயான ஒரு இளம் வீரர், இனவெறி, மதவெறிக்கு எதிராகத் துணிச்சலுடன் குரல் கொடுத்துள்ளது விளையாட்டு உலகில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

தற்போது இந்தப் புகார் தொடர்பாகக் காவல்துறையினர், ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளன. மைதானங்களில் அதிகரித்து வரும் இத்தகைய இனவெறிச் செயல்கள் குறித்து ஸ்பெயின் பயிற்சியாளர், அரசு அதிகாரிகள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset