நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டவிரோத இல்லத்தில் 36 சிறுவர்கள்: 10 ஆண்டுகளாகத் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை

பத்து கேவ்ஸ்: 

இங்கு சிலாயாங்கில் உள்ள பதிவு செய்யப்படாத ஒரு குழந்தை காப்பகம் இல்லத்தில் கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாக தொடரும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நிர்வாகி உட்பட நான்கு நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் 9 முதல் 17 வயதுக்கிடைப்பட ஆண் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனையில் பாலியல் துன்புறுத்தலுக்கு இணக்கமான காயங்கள் தெரியவந்ததால் தற்போது சிலாயாங் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த இல்லம் சுமார் 10 ஆண்டுகளாக இயங்கி வருவதாக நம்பப்படுகிறது.

31 வயது நிர்வாகி உட்பட நான்கு சந்தேக நபர்களைப் போலிஸ் கைது செய்துள்ளது. விசாரணைக்கு உதவ அவர்கள் நாளை வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 17 வயது குடியிருப்பாளரும் ஒருவராவர்.

சிலாங்கூர் மூவர்ண விழிப்புணர்வு அமைப்பின் (PKTTS) தலைவர் எஸ். மாரன் இந்த பிரச்சினையை வெளிப்படுத்தியுள்ளார். 18 வயதை அடைந்த இரண்டு முன்னாள் குடியிருப்பாளர்கள் வெளிவந்து சாட்சியமளித்த பிறகு துன்புறுத்தல் வெளிப்பட்டதாக அவர் கூறினார்.

அதே நாள் இரவு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வருவதாகக் காரணம் கூறி தனது குழுவுடன் வளாகத்தைப் பார்வையிடுவதற்கு முன்பு கோம்பாக் மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் புகார் அளித்ததாக அவர் தெரிவித்தார்.

குழு உறுப்பினர்கள் குடியிருப்பாளர்களுடன் தொடர்பு கொண்டதால் சில பாதிக்கப்பட்டவர்கள் கதை சொல்லத் தொடங்கி சந்தேகநபர்களை அடையாளம் காட்டினர் என்று அவர் கூறினார்.

சந்தேகநபரின் கைபேசியில் தொடர்புடைய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது நிலைமை மிகவும் தீவிரமானதாக அவர் தெரிவித்தார்.

"பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலம், அந்த கண்டுபிடிப்புடன், இந்த வழக்கு உண்மையில் நடந்தது என்பதில் இனி சந்தேகமில்லை" என்று அவர் கூறினார்.

அரசு சாரா நிறுவனங்கள், முன்னாள் குடியிருப்பாளர்கள், பெற்றோரால் குறைந்தது 10 போலிஸ் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

மருத்துவ பரிசோதனை முடிவுகள் சில பாதிக்கப்பட்டவர்கள்  நிகழ்ந்த துன்புறுத்தலால் காயமடைந்திருப்பதாக நம்பப்படுவதை காட்டுகிறது என்று மேலும் பேசிய அவர் கூறினார்.

"வெளிப்படுத்தினால் தண்டிப்பேன் என்று மிரட்டப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் மனதில் அதிர்ச்சி அடைந்து குரல் கொடுக்க பயந்தனர்" என்றார் அவர்.

23 ஆண்களும் 13 பெண்கள் உட்பட 36 குழந்தைகளை தங்கவைத்திருந்த வளாகத்தின் மேலாண்மையில் கண்காணிப்பு இல்லாமை, அடிப்படை பராமரிப்பு தரங்கள் மீறுவது உட்பட கடுமையான குறைபாடுகள் விசாரணையில் தெரியவந்தன.

துன்புறுத்தல் வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெற்றிருக்கலாம் என்றும் மாரன் கூறினார்.

விசாரணையில் அந்த வளாகம் சமூக நலத்துறையின் (JKM) கீழ் பதிவு செய்யப்படாமல், ஒரு தனியார் நிறுவனத்தின் கீழ் இயங்கிவந்ததாக தெரியவந்தது. 

இன்னும் குரல் கொடுக்க பயப்படும் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக நம்பப்படுவதால் 36 குழந்தைகள் அனைவரும் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையே,  சமூக நலத்துறை, தடயவியல் குழுக்கள் உட்பட அதிகாரிகள் வளாகத்தைச் சோதனையிட்டு விசாரணை தொடங்கினர்.

அரச மலேசியா போலிஸ் துறையின் பாலியல், பெண்கள், குழந்தைகள் விசாரணை பிரிவின் (D11) மூத்த உதவி இயக்குநர் சித்தி கம்சியா ஹசன், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset