நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்லாந்திலிருந்து கடத்தப்பட்ட பன்றி இறைச்சி: கெடாவில் 7 உள்ளூர் நபர்கள் கைது

மெர்போக்:

கெடா மாநிலத்தின் மெர்போக் ஆற்றுப் பகுதியில் உள்ள சட்டவிரோதத் துறைமுகம் ஒன்றில், சுமார் RM795,100 மதிப்பிலான ஏழு டன் எடையுள்ள பன்றி இறைச்சிக் கழிவுகளைப் பினாங்கு கடல்சார் காவல் துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையின் போது, கடத்தல் செயலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 7 உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

காவல் துறையினரின் இந்தச் சோதனையின் போது, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு குளிரூட்டப்பட்ட சுமையுந்துகள், பதிவு எண் இல்லாத ஒரு படகு, மூன்று இயந்திரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. 

தாய்லாந்து நாட்டிலிருந்து கடல் வழியாகக் கொண்டு வரப்பட்ட இந்த இறைச்சிக் கழிவுகளை, எவ்வித முறையான அனுமதி ஆவணங்களும் இன்றி நிலப்பகுதிக்கு மாற்ற முயன்றபோது அதிகாரிகள் இவர்களைப் பிடித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கால்நடை மருத்துவத் துறையின் எவ்வித இசைவுப் பத்திரமும் இன்றி இந்த இறைச்சி கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. பிடிபட்ட ஏழு நபர்களும் மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் கெடா மாநில கால்நடை மருத்துவத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து 1953-ஆம் ஆண்டு விலங்குகள் சட்டத்தின் கீழ் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் சுகாதாரம், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இத்தகைய கடல் வழி கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க, கடலோரப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் எனப் பினாங்கு கடல்சார் காவல் துறைத் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் ஜாஃப்ரி பிடின் தெரிவித்துள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset