நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கந்துவட்டிக் கொடுமையால் பணமோசடி: பத்து பஹாட் நீதிமன்றத்தில் இளம்பெண் மீது 7 குற்றச்சாட்டுகள் பதிவு

பத்து பஹாட்: 

சட்டவிரோதக் கந்துவட்டிக்காரர்களிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காக, தான் வேலை செய்த RM32,000 ரிங்கிட் பணத்தைக் கையாடல் செய்த 23 வயது இளம்பெண் ஒருவர், பத்து பஹாட் அமர்வு நீதிமன்றத்தில் இன்று தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். 

நூர்ஃதின் நஜ்வா அஹ்மத் பஸ்லி என்ற அந்தப் பெண் மீது சுமத்தப்பட்ட ஏழு நம்பிக்கை துரோகக் குற்றச்சாட்டுகளும் நீதிபதி ஒஸ்மான் அஃபெண்டி முஹம்மத் ஷாலே முன்னிலையில் வாசிக்கப்பட்டன.

பத்து பஹாட், தாமான் சோகா பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணியாற்றி வந்த இந்தப் பெண், கடந்த மார்ச் 21 முதல் 27-ஆம் தேதி வரையிலான காலப்பகுதியில் கடையின் தினசரி வருமானமான RM32,101 ரிங்கிட்டை பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

பிரசவ விடுப்பில் சென்ற மற்றொரு ஊழியருக்குப் பதிலாகக் கணக்கு வழக்குகளைக் கவனிக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த வேளையில், தணிக்கைச் சோதனையின்போது (Audit) பணப்பற்றாக்குறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, இந்த மோசடி அம்பலமானது.

இக்குற்றம் தண்டனைச் சட்டத்தின் 408-ஆவது பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், மலேசியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 289-ஆவது பிரிவின்படி, பெண் குற்றவாளிகளுக்குச் சவுக்கடித் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் ஷரீஃபா நதாஷா சையத் அஹ்மத் முன்னிலையானார், குற்றம் சாட்டப்பட்ட பெண் தரப்பில் வழக்கறிஞர் எவரும் முன்னிலையாகவில்லை. 

குற்றம் சாட்டப்பட்டவர் தனது தவற்றை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்கின் உண்மைகளைச் சமர்ப்பிப்பதற்கும் தண்டனை விவரங்களை அறிவிப்பதற்கும் இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset