நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசிய நாடுகளைக் கவரப் புதிய திட்டம்: மலேசிய சுற்றுலாத்துறை அறிவிப்பு

தைப்பிங்: 

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் உலகளாவிய சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மலேசியா தனது சுற்றுலா உத்திகளை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் எனப் பேராக் மாநில சுற்றுலாத்துறை செயற்குழு உறுப்பினர் லோ ஸீ யீ தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, மேற்கத்திய நாடுகளுக்குப் பதிலாக கிழக்கு ஆசிய நாடுகள், அண்டை நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதில் மலேசியா இனி அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய கிழக்குப் போர் காரணமாகச் சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளதோடு, பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடும் நிலவுகிறது. ஆனால், மலேசியாவில் எரிபொருள் விநியோகம் சீராக இருப்பதோடு விலையும் நிலையாக உள்ளது. இந்தச் சாதகமான சூழல், பாதுகாப்பான, சிக்கனமான இடத்தைத் தேடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை மலேசியாவிற்கு ஈர்க்கும் ஒரு முக்கிய காரணியாக அமையும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு முக்கிய வான்வழிப் போக்குவரத்து மையமாகத் திகழ்வதால், அங்குள்ள பதற்றம் விமானப் போக்குவரத்தைப் பாதித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக விமானங்கள் நீண்ட தூரப் பாதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளதால் பயணச் செலவு அதிகரித்துள்ளது. 

இத்தகைய சூழலில், போர் பாதிப்புள்ள நாடுகளைச் சேர்ந்த உயர் வருமானம் கொண்டவர்கள், தொலைதூரப் பணியாளர்கள்  தற்காலிகமாகத் தங்குவதற்கு மலேசியாவை ஒரு சிறந்த மாற்றாகத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக அவர் விளக்கினார்.

மேலும், சர்வதேசக் குழப்பங்களால் மலேசியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர்த்து, உள்நாட்டிலேயே சுற்றுலா மேற்கொள்ள முற்படுவார்கள். இது உள்நாட்டுச் சுற்றுலாத்துறைக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்றும் லோ ஸீ யீ தெரிவித்தார். 

தைப்பிங் மணிக்கூண்டு கோபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப சுற்றுலாத்துறை தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உறுதிபடத் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset