நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மத்திய கிழக்குப் போர் எதிரொலி: ஏர்ஏசியா விமானக் கட்டணங்கள் உயர்கிறது

பெட்டாலிங் ஜெயா: 

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், ஏர்ஏசியா விமானக் கட்டணங்கள் சற்று உயரும் என 'கேப்பிடல் ஏ' நிறுவனத்தின் தலைமைச் செயல் டான் ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். 

இருப்பினும், மற்ற விமான நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் ஏர்ஏசியாவின் கட்டண உயர்வு மிகக் குறைவாகவே இருக்கும் என்றும், பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய விலையிலேயே அவை அமையும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

எரிபொருள் விலை உயர்வால் கட்டணங்களை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று குறிப்பிட்ட அவர், வளைகுடா நாடுகளைச் சேர்ந்த எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்களின் விமானப் போக்குவரத்து சுமார் 15 முதல் 20 விழுக்காடு வரை குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். 

இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி, ஆசிய நாடுகளை ஒரு மாற்று விமானப் போக்குவரத்து மையமாக மாற்ற முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உலகளாவிய நெருக்கடி நிலவினாலும், ஏர்ஏசியா தனது சேவைகளை ரத்து செய்யாது என்றும் அவர் கூறினார். இந்தச் செலவினச் சுமையை விமான நிறுவனங்கள் மட்டுமே சுமக்க முடியாது என்றும், எரிபொருள் நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்துத் துறையும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே பயணிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்க முடியும் என அவர் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

நெருக்கடியான காலக்கட்டத்தில் அனைத்து விமான நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்படுவது ஆரோக்கியமான ஒரு மாற்றமாகும் என்று கூறிய டோனி பெர்னாண்டஸ், இந்தச் சவால்களை ஒரு வாய்ப்பாக மாற்றி விமானத் துறையை வலுப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பயணிகளுக்கான குறைந்தபட்சக் கட்டணத்தை உறுதி செய்வதே தங்களின் முதன்மை நோக்கம் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset