நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெப்பம் அதிகரித்தாலும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்: பினாங்கு கல்வித் துறை அறிவிப்பு

ஜார்ஜ்டவுன்: 

பினாங்கு மாநிலத்தில் கடும் வெப்பமான வானிலை நிலவிய போதிலும், அனைத்து 398 பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என மாநில கல்வி இயக்குநர் முஹம்மத் ஜியாவுதீன் மாட் சாத் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கல்வியில் கற்றல் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, வீட்டிலிருந்தே கற்கும் முறையை     இப்போதைக்குச் செயல்படுத்தப் போவதில்லை என அவர் விளக்கினார்.

இருப்பினும், மாணவர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, வகுப்பறைக்கு வெளியேயான விளையாட்டு, உடற்கல்வி செயல்பாடுகள் அதிகாலை வேளையிலும், நிழலான இடங்களிலும் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்குத் தேவையான மினி விசிறிகள், குடிநீரை எடுத்து வர அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சீருடைக்கு மாற்றாக விளையாட்டு உடைகளை அணியவும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் காற்றோட்ட வசதி, மின்விசிறிகளின் நிலையை மறுஆய்வு செய்யுமாறு உள்கட்டமைப்புத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வெயிலின் தாக்கத்தைக் குறைக்க மழை வேண்டி இந்த வாரம் பள்ளிகளிலும் விடுதிகளிலும் சிறப்புத் தொழுகையை நடத்துமாறு கல்வித் துறை பரிந்துரைத்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து அன்றாட மாற்றங்களைக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்த இயக்குநர், மாணவர்கள் அதிக நேரம் வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

அனைத்துப் பள்ளிகளும் வெப்பமான சூழலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதை உறுதி செய்ய மாவட்ட கல்வி அலுவலகங்களுடன் இணைந்து தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset