நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சர்வதேச நெருக்கடியிலும் தளராத நம்பிக்கை: சரவாக்கில் குவியும் வெளிநாட்டு முதலீடுகள்

கூச்சிங்: 

மத்திய கிழக்கில் நிலவும் ஈரான் தொடர்பான அரசியல் பதற்றங்கள், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள், சரவாக் மாநிலத்திற்கான வெளிநாட்டு முதலீடுகளைப் பாதிக்கவில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

மாறாக, சரவாக்கின் நிலையான வணிகச் சூழல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் சர்வதேச முதலீட்டாளர்களைத் தொடர்ந்து ஈர்த்து வருவதாகத் சரவாக் துணைப் பிரதமர் டத்தோ அமர் அவாங் தெங்கா அலி ஹசான் குறிப்பிட்டுள்ளார்.

உலகப் பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், சரவாக் தனது வலுவான உத்திகள் மூலம் இக்கட்டான சூழலைத் தாங்கி நிற்கும் திறனைப் பெற்றுள்ளது. குறிப்பாக, நீர்மின்சாரம் போன்ற பசுமை ஆற்றல் வளங்கள் சர்வதேச நிறுவனங்களைக் கவரும் முக்கிய காரணியாக உள்ளது. 

இது குறித்துப் பேசிய அவர், "உலகம் எரிசக்தி மாற்றத்தைச் சந்தித்து வரும் நிலையில், எங்களின் பலமான புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி மற்ற துறைகளையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவோம்," என்றார்.

ஆற்றல் வளங்கள் மட்டுமின்றி, செமிகண்டக்டர் போன்ற உயர் தொழில்நுட்பத் துறைகளிலும் முதலீடுகளைப் பெருக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இத்தகைய தொழிற்சாலைகளுக்குத் தடையற்ற, நிலையான மின்சாரம் அவசியம் என்பதால், சரவாக் அதற்கான சிறந்த இடமாகத் திகழ்கிறது. இதன் மூலம் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலைகளிலும் சரவாக்கின் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூச்சிங்கில் நடைபெற்ற ஹரிராயா கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட அவர், இத்தகவலை ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டார். சரவாக்கின் இந்தத் துணிச்சலான பொருளாதார அணுகுமுறை, அந்நிய முதலீட்டு ஓட்டத்தைத் தக்கவைப்பதோடு, மாநிலத்தின் நீண்டகால வளர்ச்சியை உறுதி செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset