நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கில் பரபரப்பு: 3 போலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய 8 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

ஜார்ஜ்டவுன்: 

கடந்த வியாழக்கிழமை ஜாலான் சுங்கை பினாங் மக்கள் வீட்டுத் திட்ட (PPR) குடியிருப்பிற்கு முன்னால், பணியில் இருந்த மூன்று போலிஸ் அதிகாரிகளைத் தாக்கி காயப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

26 முதல் 38 வயதுக்குட்பட்ட அந்த எட்டு நபர்களும் மஜிஸ்திரேட் துங்கு இந்தான் நதியா முன்னிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினர்.

கடந்த மார்ச் 25-ஆம் தேதி இரவு 9:50 மணியளவில், சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரைப் போலிசார் துரத்திச் சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் சிலருக்கும் போலிசாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. 

இதில் லான்ஸ் கார்ப்ரல் உவனேந் சுப்ரமணியம் உட்பட மூன்று அதிகாரிகள் காயமடைந்தனர். அரசு ஊழியர்களைப் பணியைச் செய்யவிடாமல் தடுத்து, வேண்டுமென்றே காயப்படுத்தியதாகத் தண்டனைச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு தலா RM10,000 ரிங்கிட் பிணை கோரியது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாதாரணத் தொழிலாளர்கள் என்பதையும், குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் இருப்பதையும் சுட்டிக்காட்டிய அவர்களது வழக்கறிஞர், பிணைத் தொகையைக் குறைக்கக் கோரினார். 

வாதங்களைக் கேட்ட நீதிபதி, ஒவ்வொருவருக்கும் தலா RM5,000 ரிங்கிட் பிணைத் தொகையை நிர்ணயித்ததோடு, வழக்கு தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்க மே மாதம் 19-ஆம் தேதியை அடுத்த தவணையாக அறிவித்தார்.

விசாரணையில் உள்ள இந்த எட்டு நபர்களும் மெக்கானிக், சமையல்காரர், தொழிற்சாலைப் பணியாளர், விநியோகஸ்தர்களாகப் பணியாற்றி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பக்கட்ட விசாரணையில், போலிசார் தங்களுக்குத் தேவையான கூடுதல் பாதுகாப்பைக் கோரிய பின்னரே நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset