நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனுமதி இன்றி செயல்பட்ட மலையேற்ற நடவடிக்கை: கோம்பாக் காப்பகக் காட்டில் 92 பேர் கைது

கோம்பாக்: 

சிலாங்கூர் மாநிலத்தின் உலு கோம்பாக் கூடுதல் காப்பகக் காட்டில், முறையான அனுமதி இன்றி மலைையேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 92 பேரைச் சிலாங்கூர் மாநில வனத்துறை நேற்று அதிரடியாகக் கைது செய்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்தப்பட்ட இந்தச் சிறப்பு அமலாக்க நடவடிக்கையில், 39 ஆண்கள், 53 பெண்கள் பிடிபட்டனர். இவர்களில் ஒன்பது பேர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 67 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் வனத்துறையிடம் முறையான நுழைவு அனுமதி பெறாமல் காப்பகக் காட்டிற்குள் நுழைந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இவர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு வனத்துறையிடம் எவ்வித முன் அனுமதியும் பெறப்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காகத் தாமான் மெலாவாட்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். 1985-ஆம் ஆண்டு தேசிய வனவியல் சட்டத்தின் கீழ், காப்பகக் காடுகளுக்குள் அனுமதியின்றி நுழைவது ஒரு கடுமையான குற்றமாகும். இதன் அடிப்படையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பங்கேற்பாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

வனப்பகுதிகளில் பொழுதுபோக்கு அல்லது மலைையேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்பும் அமைப்புகளும் தனிநபர்களும், பாதுகாப்புக் கருதி முன்கூட்டியே வனத்துறையிடம் அனுமதி பெறுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சட்டவிரோதச் செயல்களைத் தடுக்க மாநில வனத்துறை தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset