நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இயந்திரக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய படகு: 13 சுற்றுலாப்பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய மலேசியக் கடற்படை

கோலா திரெங்கானு: 

கோலா பெசுட் கடற்பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகில் இருந்த 13 சுற்றுலாப்பயணிகளை மலேசியக் கடற்படை அமலாக்க முகமையினர் (Maritim Malaysia) அதிரடியாக மீட்டுள்ளனர். 

நேற்று மாலை சுமார் 5 மணியளவில் 'பெர்காசா 48' என்ற ரோந்துப் படகு வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு படகு நடுக்கடலில் தத்தளிப்பதைக் கண்டறிந்தனர்.

அப்படகில் இருந்த பயணிகள் கைகளை அசைத்து உதவி கோரியதை அடுத்து, அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்தனர். விசாரணையில், அந்தப் பயணிகள் படகு இயந்திரக் கோளாறால் பாதிக்கப்பட்டு, கோலா பெசுட் முகத்துவாரத்திலிருந்து சுமார் 7.3 கடல் மைல் தொலைவில் திசைமாறி அடித்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. உடனடியாகப் பாதுகாப்பு கருதி அனைத்துப் பயணிகளும் கடற்படைப் படகிற்கு மாற்றப்பட்டனர்.

மீட்கப்பட்டவர்களில் ஒரு உள்ளூர் குடிமகனும், சீனாவைச் சேர்ந்த நால்வர், ஐக்கிய ராச்சியத்தைச் சேர்ந்த இருவர், பிரான்சைச் சேர்ந்த மூவர், சிங்கப்பூரைச் சேர்ந்த இருவர், ஒரு வங்காளதேசத்தைச் சேர்ந்த 12 வெளிநாட்டுப் பயணிகளும் அடங்குவர்.

எவ்விதக் காயமுமின்றி அனைவரும் பெசுட் கடல்சார் துறையின் படகுத்துறைக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். இக்கட்டான சூழலில் துரிதமாகச் செயல்பட்ட கடற்படையினருக்குப் பயணிகள் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சுற்றுலாப் படகு உரிமையாளர்கள் தங்கள் படகுகளின் இயந்திர நிலை, பாதுகாப்பு அம்சங்களைப் பயணத்தைத் தொடங்கும் முன் உறுதி செய்ய வேண்டும் என மாநிலக் கடற்படை இயக்குநர் கடல்சார் கேப்டன் ஹமிலுடின் சே அவாங் அறிவுறுத்தியுள்ளார். மேலும், கடலில் ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக 999 என்ற அவசர எண்ணிற்குத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset