நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் சாலைகளில் ரகசியக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்திய போக்குவரத்துத் துறை

காஜாங்: 

2026-ஆம் ஆண்டு ஹரிராயா பண்டிகையை முன்னிட்டு சிலாங்கூர் மாநில சாலைப் போக்குவரத்துத் துறை நடத்திய சிறப்புச் சோதனையில், சிவப்பு விளக்கை மீறுதல், வாகனம் ஓட்டும்போது கைப்பேசியைப் பயன்படுத்துதல் ஆகியவையே அதிகப்படியான விதிமீறல்களாகப் பதிவாகியுள்ளன. 

கடந்த மார்ச் 13 முதல் மார்ச் 29 வரை மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட தீவிரக் கண்காணிப்பில் இப்புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அவசரம், கவனக்குறைவு ஆகியவையே விதிமீறல்களுக்கான முதன்மைக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

இந்தச் சிறப்பு நடவடிக்கையின்போது சுமார் 45,140 வாகனங்கள் சோதனையிடப்பட்டன. இதில் 1,789 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, ஒட்டுமொத்தமாக 6,688 போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

வாகன உரிமம் காலாவதியானது, ஓட்டுநர் உரிமம் இல்லாமை, காப்பீடு இல்லாமை, வாகனத் தொழில்நுட்பக் குறைபாடுகள் போன்றவையும் இதில் அடங்கும். குறிப்பாக, மோட்டார் வாகன உரிமம் தொடர்பான குற்றங்களே மிக அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன.

சுமார் 334 அதிகாரிகள் 15 முக்கிய இடங்களைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதிவேக நெடுஞ்சாலைகள், பேருந்து நிலையங்கள், விபத்து அபாயம் உள்ள பகுதிகளில் தொடர் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

மேலும், விதிமீறல்களைக் கண்டறிய அதிகாரிகள் சாதாரண உடையில் விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்து ரகசியக் கண்காணிப்பிலும் ஈடுபட்டனர். இதன் விளைவாக, பேருந்து ஓட்டுநர்களிடையே விதிமுறைகளைப் பின்பற்றும் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைப் பாதுகாப்பு, பொதுமக்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த இத்தகைய சோதனைகள் தொடரும் என்று சிலாங்கூர் மாநில ஜே.பி.ஜே இயக்குநர் அஸ்ரின் போரான் தெரிவித்துள்ளார். சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி, வாகனங்களைப் பராமரிப்பதன் மூலம் விபத்துகளைக் குறைத்து அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset