நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காப்பீட்டுத் துறையில் அதிரடி மாற்றம்: நோயாளிகளின் உரிமைகோரலை இனி நிராகரிக்க முடியாது: பேங்க் நெகரா கவர்னர் அப்துல் ரஷீத்

கோலாலம்பூர்: 

மலேசியாவில் மருத்துவக் காப்பீடு, தக்காஃபுல் (MHIT) சேவையைப் பயன்படுத்துவோருக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், மலேசிய மத்திய வங்கி (BNM) புதிய விதிகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், காப்பீட்டு நிறுவனங்கள் இனி வாடிக்கையாளர்களின் மருத்துவ உரிமைகோரல்களைத் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாத நிலை உருவாகும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் டத்தோஸ்ரீ அப்துல் ரஷீத் கஃபூர் தெரிவித்துள்ளார்.

பயனீட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், 'நோ லுக்-பேக்' (No Look-back) எனும் சிறப்புப் பொறிமுறையை உருவாக்க அதிகாரிகள் தற்போது ஆலோசித்து வருகின்றனர். இந்த விதியின்படி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தடையின்றி காப்பீட்டைத் தொடரும் வாடிக்கையாளர்களுக்கு, 'முன்பே இருந்த நோய்' (Pre-existing condition) என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி சிகிச்சைக்கான பணத்தை வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் மறுக்க முடியாது.

சாதாரணமாக, ஒருவர் நோய்வாய்ப்பட்ட பிறகு காப்பீடு எடுப்பதைத் தவிர்க்கவே இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இருப்பினும், தற்போது கொண்டு வரப்படும் 'அடிப்படை மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்' மூலம், கட்டுக்குள் இருக்கும் பழைய நோய்களைக் கொண்டவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க மத்திய வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. இது தொடர்பான இறுதி முடிவுகள் மருத்துவ நிபுணர்கள், காப்பீட்டுத் துறையினரின் ஆலோசனையுடன் விரைவில் எட்டப்படும்.

இந்தத் திட்டத்தின் முன்னோடி முயற்சி 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் இத்துறையில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல்கள் கண்டறியப்பட்டு, 2027-ஆம் ஆண்டில் இத்திட்டம் நாடு முழுவதும் முழுமையாகச் செயல்படுத்தப்படும்.

இதன் விளைவாக, அனைத்துத் தரப்பு மக்களும் மலிவான விலையில் தடையற்ற மருத்துவப் பாதுகாப்பைப் பெற வழிவகை செய்யப்படும் என ஆளுநர் உறுதியளித்துள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset