நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிபொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராகக் களமிறங்கிய உள்நாட்டு வணிக அமைச்சகம்

புக்கிட் காயு ஹிதம்:

மலேசியாவின் எல்லைப் பகுதிகளில் மானிய விலை டீசல், பெட்ரோல் கடத்தப்படுவதைத் தடுக்கவும், மானிய அட்டைகளை தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

அண்டை நாடுகளுக்கு எரிபொருளைக் கடத்தி லாபம் ஈட்டும் கும்பல்கள், சிண்டிகேட்டுகளுடன் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்படாது என்று அமைச்சகத்தின் துணை அமலாக்க இயக்குநர் ஷம்சுல் நிசாம் கலீல் தெரிவித்துள்ளார். குறிப்பாக, 'பூடி மடானி' (BUDI95) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க ஒருங்கிணைந்த சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புக்கிட் காயு ஹிதம் எல்லைப் பகுதியில் உள்ள குடிவரவு, சுங்கம், பாதுகாப்பு வளாகத்தில் (ICQS) செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த புதன்கிழமை லாரி ஒன்றில் சட்டவிரோதமாக டீசல் நிரப்பிக் கொண்டிருந்த 32 வயது நபரைத் தடுத்து நிறுத்தியதைச் சுட்டிக்காட்டினார். 

அவரிடமிருந்து பல்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான டீசல் மானிய அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், அண்டை நாடுகளுக்கு மலேசிய எரிபொருளைக் கடத்தும் முயற்சி அதிகரிக்கக்கூடும் எனக் கருதி, எல்லைகளில் உள்ள எரிபொருள் நிலையங்கள் மீது தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடப்பு ஆண்டின் ஜனவரி 1 முதல் நேற்று முன்தினம் வரை மேற்கொள்ளப்பட்ட 'ஓப்ஸ் தீரிஸ் 3.0' (Ops Tiris 3.0) நடவடிக்கையின் மூலம், சுமார் 3.21 கோடி ரிங்கிட் மதிப்பிலான பெட்ரோல், டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஷம்சுல் நிசாம் தெரிவித்தார். 

இந்த காலப்பகுதியில் மொத்தம் 38,615 சோதனைகள் நடத்தப்பட்டு, 1,371 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த முறைகேடுகளில் ஈடுபட்டதாக இதுவரை 667 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் மானியப் பொருட்களைக் கடத்துவது என்பது தாயகத்திற்குச் செய்யும் துரோகம் என்று அவர் வன்மையாகக் கண்டித்தார்.

எல்லைக் கடப்பு வாகனங்கள், சந்தேகத்திற்குரிய இடங்களை உளவுத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்க மற்ற பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மானியத் திட்டங்கள் உண்மையான பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய அரசு உறுதியாக உள்ளது. முறைகேடுகளில் ஈடுபடும் நிறுவனங்கள், தனிநபர்கள் மீது சட்டப்படி கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset