நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஸ்.பி.எம் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்தார்

கோலாலம்பூர்:

2025-ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் (SPM) தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுத் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மாணவர்கள் தங்களின் உயர்கல்விப் பயணத்தைத் தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் தொடர வேண்டும் என அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பார்த்த முடிவுகளைப் பெறாத மாணவர்கள் மனச்சோர்வடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட பிரதமர், தோல்வியிலிருந்து மீண்டெழ எப்போதும் வாய்ப்புகள் உண்டு என்றும், விடாமுயற்சியே வெற்றியைத் தீர்மானிக்கும் என்றும் ஊக்கமளித்தார்.

நாட்டின் கல்வி முறை மாணவர்களின் முன்னேற்றத்திற்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும், ஒரு தேர்வு முடிவு ஒருவரின் எதிர்காலத்தை முழுமையாகத் தீர்மானித்துவிடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாகப் புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கல்வி இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மத் அசாம் அஹமத், 2024-ஆம் ஆண்டை விட 2025-ஆம் ஆண்டின் தேசிய சராசரி தரம் (GPK) 4.42-ஆக உயர்ந்து சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இம்முறை நாடு முழுவதும் மொத்தம் 13,779 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் 'A' தேர்ச்சி பெற்றுச் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

மேலும், அனைத்துப் பாடங்களிலும் குறைந்தபட்சம் 'E' தரம் பெற்றுத் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 1,41,728-ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 0.34 விழுக்காடு உயர்வாகும். 2021-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் (KSSM) கீழ், இந்த ஆண்டின் தேர்வு முடிவுகள் ஒட்டுமொத்தமாகச் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகக் கல்வி அமைச்சு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset