நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளந்தானில் சுட்டெரிக்கும் வெயில்: 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து

கோத்தா பாரு:

கிளாந்தான் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் மொத்தம் 1,418 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மலேசியத் தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்துள்ளது. 

இதில் 1,089 சம்பவங்கள் திறந்தவெளித் தீ விபத்துகளாகும். சுமார் 1,600 ஹெக்டேர் பரப்பளவிலான புதர்கள், காடுகள், குப்பைக் கிடங்குகள், தோட்டங்கள் இந்தத் தீ விபத்துகளால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகக் கோத்தா பாரு மாவட்டத்தில் அதிகபட்சமாக 400 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தற்போதைய வறண்ட வானிலை காரணமாக, இம்மாதத்தில் மட்டும் தீ விபத்து அழைப்புகள் 64 சதவீதம் அதிரடியாக அதிகரித்துள்ளன. ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதி வரை அல்லது ஜூன் மாதம் வரை வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், வரும் நாட்களில் தீ விபத்துகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 7,600 ஹெக்டேர் பரப்பளவிலான சதுப்பு நிலங்கள் தீயணைப்புத் துறையினரால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், போதிய நீராதாரம் இல்லாமை, காட்டுப் பகுதிகளுக்குச் செல்வதில் உள்ள சிரமங்கள் தீயணைப்புப் பணிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளன. நிலைமை மேலும் மோசமடைந்தால், தீயணைப்பு வீரர்களின் விடுமுறையை ரத்து செய்யவும், ஹெலிகாப்டர் சேவையைப் பயன்படுத்தவும் துறை தயாராக உள்ளது. 

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் திறந்தவெளியில் தீ வைக்க வேண்டாம் எனத் தீயணைப்புத் துறை இயக்குநர் ஃபர்ஹான் சுஃப்யான் போர்ஹான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தத் தீ விபத்துகள் சுற்றுப்புறச் சூழலைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. எனவே, பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும், தீ விபத்து குறித்த தகவல்களை உடனுக்குடன் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset