நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கண்காணிப்புக் கேமராவில் சிக்கிய கொள்ளையர்கள்: பணத்தைச் சுருட்டிய மர்ம நபர்களுக்கு போலிஸ் வலைவீச்சு

நீலாய்:

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாய், மெலாட்டி ஸ்கொயர் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நேற்று அதிகாலை துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதிகாலை 2 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அங்காடிக்குள் புகுந்து அங்கிருந்த ஊழியரைத் தாங்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். 

அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில், சாம்பல் நிறச் சட்டை அணிந்திருந்த ஒரு நபர் ஊழியரை நோக்கிப் பலமுறை கத்தியைக் காட்டி அச்சுறுத்துவதும், பின்னர் கல்லாவிலிருந்த RM600 ரிங்கிட் பணத்தைச் சுருட்டிக்கொண்டு தப்பிச் செல்வதும் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அளித்த நீலாய் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்பரின்டென்டென்ட் ஜோஹரி யாஹ்யா, தலைக்கவசம் அணிந்திருந்த அந்த இரு சந்தேக நபர்களும் ஊதா நிற யமஹா 15 வகை மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்தார். 

இச்சம்பவம் தொடர்பாக நேற்று அதிகாலை 3.30 மணியளவில் நீலாய் மாவட்டக் காவல்துறைத் தலைமையகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக, இச்சம்பவத்தில் ஊழியர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்துக் குற்றவியல் சட்டத்தின் 395, 397 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தலைமறைவாக உள்ள அந்த இரு நபர்களையும் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், வணிக நிறுவனங்கள் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும், கண்காணிப்புக் கேமராக்கள் சரியாகச் செயல்படுவதை உறுதி செய்யவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முக்கியப் பகுதிகளில் காவல்துறையினரின் ரோந்துப் பணிகள் இனி அதிகரிக்கப்படும் என்றும் ஜோஹரி யாஹ்யா தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset